இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? அந்த கருத்தில் இன்றும் உறுதியாக இருக்கிறோம்: சிபிஎம் சண்முகம் முக்கிய தகவல் – cpm shanmugam stated that the decision on whom to support in by election will be announced tomorrow

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆளுங்கட்சியான தவெகவுக்கு களமிறங்குகிறது. இதற்கிடையில் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு அளிக்குமா என்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இந்நிலையில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் இது தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இடதுசாரிகளின் முடிவு

தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவினை அளித்து வரும் இடதுசாரி இயக்கங்களான சிபிஎம், சிபிஐ கட்சிகள் இந்த அரசை நோக்கி பல விதமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அதோடு சமீபத்தில் தவெகவுக்கு ஆதரவு அளித்த கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்கு சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில், அவர்கள் பங்கேற்கவில்லை. அதோடு தவெகவின் கூட்டணியில் பங்கேற்க மாட்டோம் என்பதிலும் இடதுசாரிகள் உறுதியாக உள்ளன.

இடைத்தேர்தலில் யாருக்கு வாய்ப்பு?

இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் யாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இணைய வழியில் நடைபெற்றது. அதில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் சம்பந்தமாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

மாநில குழுவை கூட்டி முடிவு

இது முக்கியமான அரசியல் முடிவை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதால் கட்சியின் மாநில குழுவை கூட்டி, அதன் ஒப்புதலுடன் முடிவினை எடுக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்துள்ளோம். எனவே நாளை காலை கட்சியின் மாநில குழு கூட்டம் அவசரமாக திருச்சியில் நடைபெறவுள்ளது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைத்தேர்தல் சம்பந்தமான நிலைப்பாட்டினை மாநில குழு முடிவு செய்யும் என தெரிவித்தார்.

இடைத்தேர்தல் பொருத்தமற்றது

அதோடு நாளை மதியம் 2 மணிக்குள் முடிவு அறிவிக்கப்படும் எனவும் சண்முகம் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்தவர்களுக்கு தான் தவெகவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல் பொருத்தமற்றது என்று சிபிஐ கருத்து தெரிவித்துள்ளார்கள். உங்களுடைய நிலைப்பாடு என்ன என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு தொகுதிகள் காலியாக உள்ளது. அதில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். பொருத்தமற்றது என்று சொல்ல முடியாது என்றார்.

இந்த இடைத்தேர்தலில் பாஜக ஆதரவு யாருக்கு? உடைத்து பேசிய நயினார்!

ஆரோக்கியமற்ற அரசியல்

அதோடு, ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த போது எங்களுடைய கருத்தினை சொல்லியுள்ளோம். இதுவொரு ஆரோக்கியமற்ற அரசியல். சந்தர்ப்பவாத நிலை என்றெல்லாம் விமர்சனம் செய்திருக்கிறோம். அந்த கருத்தில் எந்தவிதமான மாறுபாடும் கிடையாது. அதில் உறுதியாக இருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்தார் சிபிஎம் சண்முகம்.

தவெக வேட்பாளர்களால் விமர்சனம்

இதனையடுத்து இடைத்தேர்தல் குறித்தான இடதுசாரிகள் நிலைப்பாடு நாளை தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சிபிஎம், சிபிஐ கட்சிகளுடன் இணைந்தே முடிவெடுப்போம் என அறிவித்த விசிக தலைவர் திருமாவளவன், இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு என்று அறிவித்துள்ளார். இதற்கிடையில் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்தவர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட தவெகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link