குறிப்பாக திமுக தலவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்று முதல்வர் விஜய் குற்றம் சாட்டினார். இதில் முதல்வர் விஜய் மிசா குறித்து பேசும் போது, மு.க.ஸ்டாலினைச் சைகை மூலம் உருவக் கேலி செய்யும் விதமாகப் உடல்மொழி செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, முதல்வர் விஜய்யைக் கண்டித்து மாநிலம் முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்திருந்தது. அந்த வகையில் இன்று (12-09-26) சென்னை, திருச்சி, கோவை, மதுரை என மாநிலம் முழுவதும் திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா, மிசா குறித்த அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து பேசினார். அப்போது அமைச்சரை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
அதில் பேசிய ஆ.ராசா, “ஒரு மந்திரி இருக்கிறார். அவர் மந்திரியா எங்கே படித்தார் என்னவென்று தெரியவில்லை. குரங்கு மரத்துக்கு மரம் தாவுகிற மாதிரி தாவி தாவி இங்கு உட்கார்ந்திருக்கிறார். மிசாவில் அடிபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகு, ஸ்டாலின் அடிபட்டதெல்லாம் உண்மை, ஏன் இப்படி அவதூறாக திரிக்கிறீர்கள் என்று சொல்கிறார். அரசியல் சட்டம் வந்து 75வது ஆண்டு விழாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒரு பெரிய விவாதம் மூன்று நாள் நடந்தது. இந்த அரசியல் சட்டத்தின் மீது இந்திரா காந்தி எமர்ஜென்சியில் என்னெல்லாம் படுகொலை செய்தார் என்று பா.ஜக பேசினார்கள். திராவிட முன்னேற்ற கழகத்தில் நான் பேசினேன். இந்த அரசியல் சட்டத்தில் இருக்கின்ற உரிமைகளை எல்லாம் மிசா காலத்தில் பறித்ததாக சொல்கிறீர்கள், உண்மைதான். ஆனால் இந்திரா காந்தி செய்ததை விட கொடுமையான ஆட்சியை நீங்கள் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் குற்றம் சாட்டினேன். அப்படி குற்றம் சாட்டுகிற போது, நீங்கள் எமர்ஜென்சி எமர்ஜென்சி என்று சொல்லுகிறீர்கள். உண்மைதான். இந்த நாட்டில் ஒரு மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. நான் மறுக்கவில்லை. எங்கள் ஊரில் வந்து இந்திரா காந்தி அதற்காக வருத்தம் தெரிவித்தார். மன்னிப்பு கேட்டார். ஆனால் எங்களை விடவா நீங்கள் பாதிக்கப்பட்டுவிட்டீர்கள் என்று கேட்டேன்.
மீண்டும் பேசி மிசாவில் மு.க.ஸ்டாலினுக்கு நடந்த கொடுமைகளை சொன்னேன். பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் நாடாளுமன்றத்தில் இருந்தார்கள். யாரும் பொய் என்று சொல்லவில்லை. அறையை விட்டு வெளியே வந்தேன், ஒரு கை என்னை தொட்டது. யார் தெரியுமா பிரியங்கா காந்தி. ராஜா சார் நீங்க சொன்னதெல்லாம் உண்மையா? என்று கேட்டார். அதெல்லாம் தாண்டிதான் இன்றைக்கு அரசியல் சட்டத்திற்காக மதச்சார்பின்மைக்காக உங்களோடு இருக்கிறோம் என்று சொன்னேன். அவையில் ராகுல் காந்தி இருக்கிறார், பிரியங்கா காந்தி இருக்கிறார், பிஜேபி தலைவர்கள் எல்லாம் உட்கார்ந்து இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் எமர்ஜென்சி தெரியாதா மிசா பற்றி தெரியாதா? இங்கிருக்கும் அமைச்சர் ஒருவர், இவர் அதற்காக போகவில்லை. இதற்காக போகவில்லை என்று பேசுகிறார். எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது, நீ யாருக்கு பிறந்த என்று?. இந்த தருதலை கூட்டத்துக்கு ஒரு தலைவன், ஒரு முதலமைச்சர்” என்று ஆவேசமாகப் பேசினார்.
