சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று அறிவிக்க உள்ளன.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு அடுத்தடுத்து தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுகவின் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இதனால், திருச்சி கிழக்குடன் சேர்த்து 7 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தவிர்த்து மற்ற தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருந்ததால், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதித்தது நீதிமன்றம்.
இந்நிலையில், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, ஆளும் தவெக சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா போட்டியிடுகிறார்.
திமுக சார்பில், மதுராந்தகம் தொகுதியில், திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஐ.பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் எஸ். சுகன்யாவும் நிறுத்தப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில், மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் கே.பானுமதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதற்கிடையே, தவெக ஆட்சியமைப்பதற்கு ஆதரவளித்த காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட கட்சிகள் தவெக தலைமையிலான கூட்டணியில் இணைந்து விட்ட நிலையில், இடதுசாரி கட்சிகள் தவெக கூட்டணியில் இன்னும் இணையவில்லை. அண்மையில் நடந்த தவெக கூட்டணி கூட்டத்திற்கு கூட செல்லவில்லை.
தற்போதைய இடைத்தேர்தலில் சிபிஐ மற்றும் சிபிஐஎம் கட்சிகள் பொதுத்தேர்தலின் போது, கூட்டணியில் இருந்த திமுகவுக்கு ஆதரவளிப்பார்களா? அல்லது தவெக கூட்டணிக்கு ஆதரவளிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தரப்பில் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அதில் இணையாமல், வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு என தெரிவித்ததோடு, மக்களின் பிரச்சனைகளை மையப்படுத்தி அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்த இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வரும் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்கலாம் என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் மு. வீரபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் குழு கூட்டம் நேற்று காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இன்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, அக்கட்சியின் முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் சட்டசபை இடைத்தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடைபெறும் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடைபெற்ற கூட்டத்தில் இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில குழுவை கூட்டி, முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளோம். ஞாயிறு காலை அவசர மாநில குழு கூட்டம் திருச்சியில் நடக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் முடிவு என்பதால், மாநிலக் குழு கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறோம். ஞாயிறு மதியம் 2 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
“சந்தர்ப்பவாத நிலை என்பதை நாங்கள் ஏற்கனவே தெளிவாக விமர்சித்திருக்கிறோம். அந்த விமர்சனத் தில் எந்தவிதமான மாறுபாடும் கிடையாது. இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து அம்சங்களும் மாநில குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும். இடைத்தேர்தலை புறக்கணிப்பது அல்லது வேறு ஏதேனும் முடிவுகள் எடுப்பது குறித்து அந்த கூட்டத்திற்கு பிறகு எங்களுடைய இறுதியான மற்றும் உறுதியான முடிவை நாங்கள் முறைப்படி அறிவிப்போம்.” என்றார்.
