இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் எப்போது அறிவிப்பு? – மாணிக்கம் தாகூர் தகவல்!

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில், தவெக ஆதரவு மற்றும் தோழமைக் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (09.09.2026) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  உள்ளிட்ட முக்கியக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் பங்கேற்றனர். அப்போது இந்த கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி எனப் பெயரிடப்பட்டு அதிகாரப்பூர்வ வெளியானது.

இதனையடுத்து மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,“தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் தலைமையில், தமிழக வெற்றி கழக அலுவலகத்தில் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. கடந்த ஜூலை 1ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், கூட்டணியின் தலைவர்கள் வைகோ, காதர் மொகிதீன், திருமாவளவன் உள்ளிட்டோரும், நானும், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினோம். அப்போது, அடுத்த கூட்டத்தில் இந்தக் கூட்டணியின் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தோம்.

அதன்படி, இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கிய கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யும் கலந்து கொண்டார். அவருடைய தலைமையில், கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’என்று பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கூட்டணியாகும். இந்தக் கூட்டணியின் பெயர் இன்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டணி மிகவும் பலமான கூட்டணியாக இருக்கும். வருகின்ற இடைத்தேர்தல்களில் இந்தக் கூட்டணியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர் என்ற செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்கள் நாளை (10.09.2026) அறிவிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இரண்டு இடைத்தேர்தல்களிலும் இந்தக் கூட்டணியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். அவர்களின் வெற்றிக்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். இரண்டாவதாக, இந்தக் கூட்டணி சமூகநீதியின் அடிப்படையிலும், மதச்சார்பற்ற கொள்கையின் அடிப்படையிலும், தமிழகத்தின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட கூட்டணியாகும். தமிழகத்தில் ஒரு நேர்மையான ஆட்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காகவும், பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒரு நேர்மையான ஆட்சி அமைந்துள்ளது என்ற நம்பிக்கையுடனும் இந்தக் கூட்டணிக்கு நாங்கள் அனைவரும் ஆதரவு அளிக்கிறோம்.

இந்தக் கூட்டணியில் பங்கேற்கும் கட்சிகளும், ஆதரவு அளிக்கும் கட்சிகளும் உள்ளன. இந்தக் கூட்டணி மிகவும் வலுவாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடித்தளம் மிகவும் வலுவாக உள்ளது. கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்து பயணிக்கும் அனைத்து கட்சிகளும் இந்தக் கூட்டணியில் ஒன்றாக இணைந்துள்ளன. கொள்கை அடிப்படையிலேயே நாங்கள் இணைந்திருக்கிறோம். இந்தக் கூட்டணி தமிழகத்தில் ஒரு பலமான கூட்டணியாக இருக்கும்.”எனத் தெரிவித்தார்.

Source link