“இடைத்தேர்தல் நடத்தத் தடை விதிக்க வேண்டும்”

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அதே சமயம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கில் அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு (முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் ராஜினாமா செய்த தொகுதி) ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவதற்கு  உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இதன் காரணமாக, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்திலேயே மக்கள் தீர்ப்பைப் புறக்கணித்துவிட்டு, அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும்போது, கடந்த முறை நடைபெற்ற தேர்தலுக்கான செலவுத் தொகையை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். 

சொந்த அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பொதுமக்களின் வரிப்பணத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தத் தேர்தல் செலவுகளுக்கு அவர்கள் பொறுப்பேற்கும் வகையில் உரிய நடைமுறையை வகுக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்திலேயே தங்களது தொகுதி மக்களின் தீர்ப்பைப் புறக்கணித்துவிட்டு அவர்கள் பதவியை விலகியுள்ளதால், குறிப்பிட்ட காலத்திற்குத் தேர்தலில் போட்டியிட அவர்களுக்குத் தடை விதிக்க வேண்டும். 

இதுதொடர்பாக உரியச் சட்டம் கொண்டு வர வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தடை விதிக்க வேண்டும். தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவதால், முன்னாள் எம்.எல்.ஏ.க்களான மரகத குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்வதை ஏற்கத் தேர்தல் ஆணையத்திற்குத் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link