சென்னை: இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர், அவசரகால வழி கதவை திறக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் மொத்தம் 142 பயணிகள் இருந்தனர். சென்னை விமான நிலையத்தில் விமானம் இன்று பாதுகாப்பாக இறங்கியது.
ஓடுபாதையில் ஓடி நிற்பதற்காக தயாராக விமானம் இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பயணி ஒருவர் அவசரகால வழி கதவை திறக்க முயற்சித்து இருக்கிறார். விமானியின் அறையில் அலாரம் ஒலிக்கவே, விமானிகள் குழுவினர் சுதாரித்துக் கொண்டனர்.
உடனடியாக பயணிகள் இருக்கும் பகுதிக்கு வந்த அவர்கள், அவசரகால வழி கதவை திறக்க முயற்சித்தது யார் என்பது குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். விசாரணையில், அவசரகால வழி கதவு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த ஸ்ரீசைலம் (40) என்ற பயணியே இந்த செயலை செய்தது தெரிய வந்தது. அவர் தெலுங்கானாவைச் சேர்ந்தவர். சென்னையில் மொத்த காய்கறி வியாபாரம் செய்து வருபவர்.
விசாரணையின் போது, தவறுதலாக அவசரகால பொத்தானில் கை வைத்து விட்டதாக காய்கறி வியாபாரி ஸ்ரீசைலம் கூறி இருக்கிறார். இருப்பினும், தொடர்ந்து விசாரணை நடத்த ஏதுவாக அவர் விமான நிலைய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.
