– நமது நிருபர் –
‘முதல்வர் விஜய் – லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சந்திப்பு, சென்னையில் நடக்கும் போது, இண்டி கூட்டணியில், தமிழக வெற்றிக் கழகத்தை இடம்பெற வைப்பது குறித்து பேச்சு நடத்த வேண்டும்’ என, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபாலிடம், அக்கட்சி எம்.பி.,க்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக காங்கிரசை வலுப்படுத்தவும், 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராகுலை பிரதமராக்கவும், ‘மிஷன் 2029’ என்ற திட்டத்தை அக்கட்சி வகுத்துள்ளது. அதன்படி, மாமல்லபுரத்தில் மாவட்ட தலைவர்களுக்கான, 10 நாள் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. கருத்தரங்கில், அகில இந்திய காங்., செயலாளர் செல்லக்குமார் பங்கேற்று பேசினார்.
பயிற்சி முகாமின் நிறைவு நாளான ஆகஸ்ட், 1ல், ராகுல் பங்கேற்கிறார். அவரது வருகையின் போது, நடக்க உள்ள அரசியல் சந்திப்புகள், அதிக கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, முதல்வர் விஜய் – ராகுல் சந்திப்பு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியில், ராகுல் பங்கேற்றார். தமிழக முதல்வராக டில்லி சென்ற விஜய், ராகுல் வீட்டில் விருந்து சாப்பிட்டார். அதன்பின், இருவருக்குள்ளும் பரஸ்பர நட்பு உருவாகி உள்ளது. ‘நீட்’ விவகாரம் தொடர்பாக, டில்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் கைது செய்யப்பட்ட போது, தவெக அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்தது. இது, இரு கட்சிகள் இடையேயான நெருக்கத்தை வெளிப்படுத்தியது.
இந்நிலையில், ராகுலின் சென்னை வருகையின் போது, அவர் முதல்வர் விஜயை சந்திப்பது, தேசிய மற்றும் தமிழக அரசியல் சூழலில், புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என, காங்கிரசார் எதிர்பார்க்கின்றனர். உள்ளாட்சி மற்றும் லோக்சபா தேர்தல்களில், இரு கட்சிகளின் கூட்டணி ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அதிகாரப்பூர்வமாக கூட்டணியின் பெயர், ஒருங்கிணைப்பு தலைவர் பெயர் மற்றும் ‘இண்டி’ கூட்டணியில் த.வெ.க., இடம் பெறுவது குறித்து, விஜயுடன் ராகுல் பேச வேண்டும் என, காங்., எம்.பி.,க்கள் சிலர் விரும்புகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபாலிடம், அக்கட்சி எம்.பி.,க்கள் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
