புதுடில்லி: பேஸ்புக்கில் பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனம் அளித்த விளக்கத்தில் முழு திருப்தியில்லை என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் கிருஷ்ணன் கூறியுள்ளார்.
‘நீட்’ எனப்படும், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி, டில்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கும் மேல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். இது தீவிரமடைந்ததை அடுத்து, தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். தொடர்ந்து, போராட்டமும் கைவிடப்பட்டது.
கடந்த 23ல், அமெரிக்காவைச் சேர்ந்த, ‘மெட்டா’ நிறுவனத்துக்குச் சொந்தமான, ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத்தில், இளம் தலைமுறையினருடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் பிரதமர் மோடி, ‘செல்பி’ வீடியோ வெளியிட்டார். தில், ‘வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்’ என, உறுதி அளித்திருந்தார். பின், இந்த வீடியோவை, ‘பேஸ்புக்’கிலும் அவர் பகிர்ந்தார். இந்த வீடியோ திடீரென, ‘பேஸ்புக்’கில் இருந்து நீக்கப்பட்டது.
‘பேஸ்புக்’கில் இருந்து பிரதமர் மோடியின் வீடியோ பதிவை நீக்கியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, ‘மெட்டா’வின் உலகளாவிய பொது கொள்கை தலைவருக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சம்மன் அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து அந்த அமைச்சகத்தின் செயலாளர் கிருஷ்ணன் அளித்த பேட்டி: பிரதமரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியான அதிகாரப்பூர்வமான தகவல் தற்காலிகமாக நீக்கப்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. இது நடந்து இருக்கக்கூடாது. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட மெட்டா நிறுவனத்தின் நடவடிக்கையை நல்ல துவக்கம் என வரவேற்கிறோம். ஆனால், அந்த நிறுவனத்தின் விளக்கத்தில் அமைச்சகத்துக்கு முழு திருப்தி இல்லை.மெட்டா நிறுவனத்திடம் இருந்து கூடுதல் தகவல்களை நாங்கள் கேட்டுள்ளோம். இந்த தவறு எப்படி நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காக விரிவான தொழில்நுட்ப ஆலோசனை நடத்துவோம்.
இந்தியாவில் உள்ள முக்கியப் பிரமுகர்களின் கணக்குகள் பாதுகாக்கப்படும் என்றும், சரிபார்க்கப்பட்ட கணக்குகளில் பதிவிடப்படும் உள்ளடக்கங்கள், சிறு காரணங்களுக்காகவோ அல்லது அல்காரிதம் தவறுகளுக்காகவோ நீக்கப்படாது என மெட்டா நிறுவனத்திடம் இருந்துஉத்தரவாதத்தை கோருவோம்.இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்யப்படுவதை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். வாட்ஸ்அப் செயலியில் பயனர் முறை அறிமுகம் குறித்து மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அது குறித்து ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
