“இது மத்திய அரசின் மிகப்பெரிய தவறு” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு!

ராஜஸ்தான் மாநில அரசு தோல்பூர் 330 மெகாவாட் எரிவாயு மின் நிலையத்திலிருந்து நாட்டின் மிக அதிக விலையிலான மின்சாரத்தைப் பெற்று வருகிறது. அதாவது அக்டோபர் மாதத்தில் மின் உற்பத்தி செலவு ஒரு யூனிட்டுக்கு ரூ. 46.09-ஐ எட்டியுள்ளது. இருப்பினும், இந்த செலவை ஈடுகட்டுவதற்கு இந்த மின் நிலையத்தின் உரிமையாளரிடம் அங்கீகரிக்கப்பட்ட கட்டண ஒப்பந்தம் ஏதும் இல்லை எனப் பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரை ஒன்றியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இதனைச் சுட்டிக்காட்டி தமிழக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் ஒரு மிகப்பெரிய தவறு அல்லது குறைபாடாகும். ராஜஸ்தான் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ. 46.09 செலவிடுவதாக இந்த கட்டுரை கூறுகிறது. இது மத்திய அரசின் தேசிய அளவிலான மின் தேவை கணிப்பு மற்றும் ஆதாரங்களின் போதிய திட்டமிடல் ஆகியவற்றின் மீது கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய மின் துறை நிறுவனங்களைப் போலன்றி, தனித்தனி மாநிலங்களுக்கு நாடு தழுவிய மின் தேவை மற்றும் உற்பத்தி இருப்பு பற்றிய வரையறுக்கப்பட்ட பார்வையே உள்ளது. 

இத்தகைய தேவை – வழங்கல் இடைவெளிகள் ஏன் முன்கூட்டியே கணிக்கப்பட்டுத் திட்டமிடப்படவில்லை என்பதை மத்திய மின்சக்தி அமைச்சகம் ஆராய வேண்டும். எதிர்காலத்தில் மாநிலங்கள் இது போன்ற மிக அதிக விலையிலான மின்சாரத்தைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக, மத்திய மின்சக்தி அமைச்சகம் இப்போதாவது தேசிய அளவிலான மின் தேவை கணிப்பு மற்றும் மாநிலங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பைத் திட்டமிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.