சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை அடியோடு மாற்றியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெகவுக்கு ஆட்சியமைத்துள்ளது. இடைத்தேர்தலிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது. இதனால் தவெக மீது திமுக, அதிமுகவினர் பயங்கர கோபத்தில் உள்ளனர். முதலமைச்சர் விஜய், தவெகவினர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளனர். திமுக பெண் கவுன்சிலர் விஜய் குறித்து ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்த விவகாரத்தில் திருமாவளவன் திமுகவை நேரடியாக வைத்துள்ள விமர்சனம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சென்னை வளசரவவாக்கத்தில் கண் அறுவை சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் மருத்துவர் பிரகாஷ், அமைச்சர் வெங்கட்ரமணன், நடிகை சஞ்சனா ஆகியோருடன் நானும் பங்கேற்றுள்ளேன். அவர் மிக இலகுவாக சந்திக்க கூடிய மருத்துவர். 30 வருடங்களுக்கு மேலாக எளிய மக்களுக்கு மருத்துவ சேவையை செய்து வருகிறார்.
அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் கண் மருத்துவம் விழிப்புணர்வு கட்டுரையை வாசித்தார். உலக நாடுகளில் பல்வேறு மாநாடுகளில் பங்கேற்ற பெருமைக்குரியவர். அவருடைய பணி சிறக்க வாழ்த்துகள். நாகரீக வரம்பு மீறாமல் அரசியல் விமர்சனங்களை வைக்க வேண்டும். அதுதான் அரசியல் நாகரீகமாகும். அண்மை காலமாக பொது மேடைகளில் நாகரீக வரம்புகளை மீறி பேசும் கலாச்சாரம் பரவி வருவது கவலையளிக்கிறது.
இத்தகைய போக்குகள் நம்முடைய அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல. தவெகவை ஏன் திமுகவினர் தொடர்ச்சியாக விமர்சிக்கிறார்கள் என்று திமுக தலைவரிடம் தான் கேட்க வேண்டும். அரசியல் விமர்சனங்கள் எழுவது இயல்பு. ஆனால் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலையில் இருப்பவர்கள் நாகரீக அரசியலை மீறி பேசுகிற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது அரசியலுக்கு நல்லதல்ல” என்றார். திமுகவை திருமாவளவன் நேரடியாக கண்டித்திருப்பது அரசியல் பேசு பொருளாகியுள்ளது.
