கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆக.28ஆம் தேதி வெளியான படம் ‘ஹாய்’. காதலை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியிருந்தார். இப்படத்தை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ரௌடி பிக்சர்ஸ்’ இணைந்து தயாரித்திருந்தது. ஜென் மார்டின் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் விஷ்ணு எடவன், “ஹாய் என் முதல் திரைப்படம் என்பதால், இந்த மேடையில் இயக்குநராக நிற்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணம். இந்தப் பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்து, என்னை நம்பி இந்தப் படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. குறிப்பாக, என் ஆரம்பகால சினிமா பயணத்தில் எனக்கு அடையாளம் கிடைக்க காரணமாக இருந்தவர்களுக்கும், என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆதரித்தவர்களுக்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞரும் என்மீது நம்பிக்கை வைத்து, தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். மூத்த நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாகக் கொண்டு வந்தனர். சத்யன் சார், குரேஷி, அக்ஷய் குமார், அம்ருதா, காவ்யா உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எனது முதல் படத்திலேயே இவ்வளவு திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது எனக்குப் பெருமையான விஷயம்.
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினுடனான நட்பு பள்ளிப் பருவத்திலிருந்தே தொடர்கிறது. பள்ளி நாட்களிலேயே ‘நான் இயக்குநராவேன், நீ இசையமைப்பாளராவாய்’ என்று பேசிக் கொண்டிருந்தோம். இன்று எனது முதல் படத்திற்கு அவரே இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோல் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தனர். அவர்களின் பங்களிப்பு இல்லாமல் நான் வழி தெரியாமல் இருந்திருப்பேன்.
எனக்கு வாய்ப்பளித்து, என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தின் பின்னால் உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர்கள் விக்னேஷ் சிவன் அண்ணா, நயன்தாரா மேம், எஸ். எஸ். லலித்குமார் சார் மற்றும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பு தொடங்கியது முதல் படம் வெளியாகி வெற்றி பெறும் வரை, பலரும் பல்வேறு வகையில் எனக்கு ஆதரவாக இருந்தனர். இந்தப் படம் எனக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல; என்னை நம்பி இந்தப் பயணத்தில் இணைந்த ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி,” என்றார்.
