வாஷிங்டன்: வரும் வாரங்களில் இபி-1 க்ரீன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு அரசின் சார்பில் க்ரீன் கார்டு வழங்கப்படும். ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு சார்ந்த 1.40 லட்சம் கார்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன. குடியேற்றக் கொள்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம் பல்வேறு கெடுபிடிகளை காட்டி வருவதால், நாளுக்கு நாள், இந்த க்ரீன் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.
எந்தவொரு குறிப்பிட்ட நாட்டுக்கும் 7 சதவீதத்திற்கும் அதிகமாக க்ரீன் கார்டு வழங்கப்படக் கூடாது என்ற வரம்பு உள்ளது. அமெரிக்காவின் க்ரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்து காத்திருப்பவர்களின் பட்டியலில் 79 சதவீதம் பேர் இந்தியர்களாவார்.
இந்த நிலையில், தேவை அதிகரிப்பின் காரணமாக, இந்திய நாட்டினருக்கான வேலைவாய்ப்பு சார்ந்த இபி-1 (EB-1) க்ரீன் கார்டுகள், வரும் வாரங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறிவியல், கலை, வணிகத்தில் திறமை வாய்ந்தவர்களுக்கு வழங்கப்படும் இபி-1 பிரிவில் இருப்பவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இந்த கார்டு செல்லும்.
அமெரிக்க நிதியாண்டு செப்டம்பர் 30க்குள் முடிவடைவதற்கு முன்பாகவே, இந்தியாவில் இருந்து இபி-1 பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், இந்தியாவுக்கான குறிப்பிட்ட எண்ணிக்கை முடிந்து விடும், என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
