வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம், சட்டவிரோத புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்று கடும் சர்ச்சையையும், இனவெறி குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, குடியேற்ற விதிகளை கடுமையாக்கி, சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார். இந்நிலையில், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை, சட்டவிரோதமாக குடியிருப்பவர்களுக்கு எதிராக, பிரபல ஹாலிவுட் படமான ‘டிரான்ஸ்பார்மர்ஸ்’ திரைப்பட பாணியில் விளம்பரம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
அதில், படத்தின் முக்கிய கதாபாத்திரமான ஆப்டிமஸ் பிரைம் என்ற இயந்திர மனிதன், அமெரிக்க சின்னத்துடன் உள்ளது. தாடி வைத்து இந்தியர் போன்ற தோற்றத்தையுடைய ஒருவரை அது எதிர்கொள்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே; எங்கள் சாலைகளில் வராமல் விலகி நில்லுங்கள்; உங்களுக்கு வண்டி ஓட்டக் கூட தெரியாது மிஸ்டர் சிங்’ என்ற வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் மிகப் பெரிய டிரக்குகளை இயக்கும் டிரைவர்களில், இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்களே பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்களை வெளியேற்றுவதில் டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், சீக்கிய சமூகத்தினர் மற்றும் இந்தியர்களுக்கு எதிராக இனவெறியை துாண்டும் வகையில், இந்த விளம்பரம் உள்ளதாக கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்திய, ஹிந்து மற்றும் சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
