புதுடில்லி: ரஷ்யா உடன் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் கூடிய விரைவில் விமான தயாரிப்பு பணிகளைத் துவங்குவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
டில்லியில் நிருபர்களிடம் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது: இந்தியா தலைமை தாங்கி நடத்தவிருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாடு மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். உலக நாடுகள் அனைத்தும் இந்த மாநாட்டையும், இந்தியாவின் திட்டங்களையும் உற்று நோக்கி வருகின்றன.
உலக நாடுகள் அனைத்தும் இந்த மாநாட்டையும், இந்தியாவின் திட்டங்களையும் உற்று நோக்கி வருகின்றன. பல்வேறு துறைகள் மற்றும் நாடுகளின் பிரதிநிதிகள் குழுக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பதால், பிரிக்ஸ் மாநாட்டில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராகி உள்ளது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் மற்றும் ரஷ்ய தரப்புக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் கூடிய விரைவில் விமான தயாரிப்பு பணிகளைத் துவங்குவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இரண்டு வகையான விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன. ஒன்று டர்போப்ராப் ஐஎல்-114, மற்றொன்று ஜெட் இன்ஜின் விமானமான சுகோய் சூப்பர்ஜெட் 100. பல விமான நிலையங்கள் உருவாகி வருவதால், அவற்றை தயாரிப்பது நமக்கு மிகவும் முக்கியமானது. இது தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
நான் ரஷ்ய தூதுக்குழுவினரைச் சந்தித்த போது 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது என்றும், இன்று இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தையும், பாராட்டினர். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுக்கு இந்தியா மிக கூட்டாளியாக மாறியுள்ளது; இந்தியா இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார்.
