இந்தியாவுக்குள் ஊடுருவிய அமெரிக்கர் நாட்டுக்கு எதிராக சதி செய்யவில்லை: என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல்

புதுடில்லி: அமெரிக்காவைச் சேர்ந்த வான்டைக் மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆறு பேர், கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்து சட்டவிரோதமாக எல்லையை கடந்து மியான்மர் சென்ற வழக்கில், அவர்கள் இந்தியாவுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என என்.ஐ.ஏ., விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ ஆரோன் வான்டைக் மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆறு பேர், கடந்த ஆண்டு டிசம்பரில் சுற்றுலா விசாவில் இந்தியா வந்தனர்.

அதன் பின், நம் அண்டை நாடான மியான்மருக்கு சட்டவிரோதமாக சென்று திரும்பிய போது கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியது.

மியான்மரைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுக்களுக்கு, ட்ரோனை தாக்குதலுக்கு பயன்படுத்துவது, ட்ரோன் தயாரிப்பு மற்றும் தகவல் தொடர்பு தடுப்பு தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் அவர்கள் பயிற்சி அளித்ததாகவும், அந்நாட்டின் ஆயுதம் ஏந்திய அமைப்புகள் உடன் இணைந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், வான்டைக் உள்ளிட்ட ஏழு பேர் மீதும் என்.ஐ.ஏ., நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், வான்டைக் உள்ளிட்டோர் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதற்கோ அல்லது இந்திய பயங்கரவாத குழுக்களுக்கு பயிற்சி அளித்ததற்கோ உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை. இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடக்கிறது என அதில் கூறப்பட்டு உள்ளது.

புதிய ஆதாரங்கள் கிடைத்தால், அவற்றின் அடிப்படையில் கூடுதல் குற்றப்பத்திரிகை உள்ளிட்ட அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என என்.ஐ.ஏ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source link