ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுகிறது. கடந்தாண்டு, இந்த கூட்டமைப்பில், எகிப்து, எதியோப்பியா, இந்தோனிசியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபி எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இணைந்தன.
இந்த நிலையில், 18வது பிரிக்ஸ் உச்ச மாநாடு இந்தியாவில் நாளை (12-09-26) மற்றும் நாளை மறுநாள் (13-09-26) ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அந்த வகையில் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்தடைந்தார். மாஸ்கோவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி வந்த புதினை, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கேவி சிங்க் வரவேற்றார். புதின் வருகையை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசிக்கவுள்ள புதின், நாளை டெல்லியில் நடைபெறும் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். 2022-ல் உக்ரைன் போர் வெடித்ததிலிருந்து, ரஷ்யாவுக்கு வெளியே நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் புதின் நேரில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை. அதே சமயம், இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளவுள்ளார். ரஷ்ய அதிபரும், சீன அதிபரும் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
2006இல் உருவான பிரிக்ஸ் அமைப்பில் 21 உலக நாடுகள் பங்கேற்றுள்ளன. கடந்த 2012, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கி மாநாட்டை நடத்தியுள்ளது. இந்த சூழலில் 4வது முறையாக இந்தாண்டு இந்தியா தலைமை தாங்கி இந்த மாநாட்டை நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
