இந்து சமய அறநிலையத்துறையில் இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வட மாவட்டங்களை உள்ளடக்கி சென்னை மண்டலமும், தென் மாவட்டங்களை உள்ளடக்கி திருச்சி மண்டலமும் பிரிக்கப்பட்டுள்ளது. இரு கூடுதல் ஆணையர்கள் தலைமையின் கீழ் இரு மண்டலங்களும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையில் இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இந்து சமய அறநிலையத்துறையில் இரண்டு கூடுதல் ஆணையர் (மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்) பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களை உள்ளடக்கி சென்னை மண்டலமும், திருச்சி, திருப்பூர், நாகை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களை உள்ளடக்கி திருச்சி மண்டலமும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மண்டலங்களிலும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அந்தஸ்தில் இருப்பவர்கள் கூடுதல் ஆணையர்களாக பணியமர்த்தப்படவுள்ளனர்.
