பாகிஸ்தானில் ஜென்ஸீ எழுச்சி சாத்தியம் ‘ஆகாதது’ ஏன்? – ஒரு பின்புலப் பார்வை

இலங்கை, வங்கதேசம், நேபாளம், இந்தியா என்று தெற்காசிய நாடுகளில் 2022-ல் தொடங்கி ஜென்ஸீ தலைமுறை இளைஞர்களின் போராட்டமும், அதன் மூலம் நிகழ்ந்த ஆட்சி, அரசியல் மாற்றங்களும் உலகையே திரும்பிப் பார்க்கவைத்துவிட்டன. இந்தப் பட்டியலில் அண்டை நாடான பாகிஸ்தான் இடம்பெறவில்லை. பாகிஸ்தான் ஜென்ஸீக்கள் அப்படியொரு போராட்டத்தை முன்னெடுக்க முடியாததன் பின்புலத்தைப் பார்ப்போம்.

அத்தனை காரணிகள் இருந்தும்…

இத்தனைக்கும் அரசுக்கு எதிரான ஒரு பெரிய புரட்சி வெடிக்கத் தேவையான அளவு பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. சர்வதேச நிதியத்தின் ‘பெயில் அவுட்’ ஆப்ஷனில் தான் பாகிஸ்தான் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறது. அதேபோல், இளைஞர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வேலைவாய்ப்பின்மை, தெற்காசியாவிலேயே பாகிஸ்தானில்தான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். அந்நாட்டின் ராணுவத்தின் ஆதிக்கம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் மட்டுமல்லாது, சிவில் சமூகத்தின் மீது பெரும் கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது.

இருந்தும் கூட பாகிஸ்தானில் இலங்கை, வங்கதேசம், நேபாளம், இந்தியாவில் நடந்ததுபோல் இளைஞர்கள் முன்னெடுத்த கிளர்ச்சிகளோ போராட்டங்களோ ஏதும் நடைபெறவில்லை.

இந்தக் கேள்வி அண்டை நாடுகளுக்கு மட்டுமல்ல, பாகிஸ்தான் ஜென்ஸீ தலைமுறையினருக்கும் எழுந்திருக்கலாம், ஏன் நமக்கும் கூட எழலாம்.

இந்தப் பின்னணியில் தெற்காசிய விவகாரங்களில் உலகப் புகழ்பெற்ற அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணர் மிக்கேல் கூகெல்மேன் (Michael Kugelman) தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பார்வையை முன்வைத்துள்ளது கவனிக்கத்தக்க ஒன்று.

“பாகிஸ்தானில் ஊழல், அடக்குமுறை, வேலைவாய்ப்பின்மை என அரசுக்கு எதிரான ஓர் இயக்கமாக இளைஞர்கள் திரள்வதற்கான காரணிகள் மிகுந்திருந்தும் கூட இலங்கை, வங்கதேசம், நேபாளம் மற்றும் இப்போது இந்தியாவில் நாம் சமீபத்தில் பார்த்தது போல, பாகிஸ்தான் இளைஞர்களால் மாற்றத்தை ஏற்படுத்தும் இயக்கம் ஏன் உருவாகவில்லை?” என்ற கேள்வியுடன் ஆரம்பித்துள்ளார் கூகெல்மேன்.

இத்தனைக்கும் பாகிஸ்தான் இளைஞர்களை அரசியல் மந்தநிலை கொண்டவர்கள் என்று வரையறுத்துவிட முடியாது. காரணம், அண்மையில் ஜந்தர் மந்தரில் நடந்த சிஜேபி போராட்டத்தைப் பற்றி, “எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் சிஜேபியை போல் வீதிகளில் திரண்டு போராட வேண்டும். அவர்கள் உண்மையிலேயே வெகு இயல்பாய் செயல்படுகின்றனர். அவர்களிடம் பதற்றமில்லை. எனக்கு அது பிடித்திருக்கிறது” என்று சர்வதேச ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில் ஓர் இளைஞர் கூறியிருந்தது பாகிஸ்தான் ஜென்ஸீக்கள் அரசியல் அக்கறையற்றவர்கள் அல்ல என்பதற்கொரு சான்று.

இருந்தாலும் பாகிஸ்தானுக்குள் இப்படி தன்னெழுச்சியாக கட்டமைக்கப்பட்ட இளைஞர்கள் கூட்டம் திரள்வது நடந்தேறவில்லை.

வரலாறு சொல்வது என்ன?

பாகிஸ்தான் அரசியல் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால், ராணுவ சர்வாதிகாரி ஜியா உல் ஹக்-க்கு எதிராக, பர்வேஸ் முஷரஃப்பின் நீதித்துறை மீதான கட்டுப்பாடுகளுக்கு எதிராக பலூசிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள செயற்பாட்டாளர்கள் பல்வேறு பிரச்சாரங்களையும் முன்னெடுத்தது தெரியவரும்.

அரசை கேள்விகேட்கக் கூடிய ஆர்வலர்கள், இயக்கங்கள் ஏன் ஒரு பெரிய ஒன்றிணைந்த குழுவாக உருவாக முடியவில்லை என்பதன் பின்னணியில் பிற தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானில் மாணவர்கள் அரசியல் களம் மிகவும் பலவீனமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவாக இருக்கட்டும், வங்கதேசமாக இருக்கட்டும், இன்னும் பிற தெற்காசிய நாடுகளாக இருக்கட்டும், இளைஞர்களை அரசியல்படுத்துவதை வலுவான கடமையாகச் செய்திருக்கின்றன. அதன் பின்னணியில் அந்தந்த நாட்டின் சக்திவாய்ந்த அரசியல் கட்சிகள் இருந்திருக்கின்றன. அவை இளைஞரணியை உருவாக்குவதையும், இளைஞரணி சார்பிலான போராட்டங்களை முன்னெடுப்பதிலும் முனைப்புக் காட்டின.

இங்குதான் மிக்கேல் கூகெல்மேன், ஜியா உல் ஹக்கை நினைவுகூர்கிறார். அவருடைய ராணுவ சர்வாதிகாரத்தின் கீழ்தான் பாகிஸ்தான் இளைஞர்கள் அரசியல்மயமாவது அழித்தொழிக்கப்பட்டது என்கிறார்.

1980-ல் பாகிஸ்தானின் பல்வேறு மாணவர்கள் சங்கங்கள் மீது ஜியா உல் ஹக் தடை விதித்தார். அவற்றில் பெரும்பாலானவை இன்னும் கூட உயிர் பெறவில்லை. பாகிஸ்தானில் இளைஞர்களுக்கு பஞ்சமில்லை. அங்குள்ள இளைஞர்களும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆக மாறுவதிலும் குறைவில்லை. ஆனால், மாணவர்கள் சங்கங்கள் மீதான தடை ரத்தாகாமல் இருப்பது அவர்கள் பரந்துபட்டு ஒன்றிணைய தடையாக உள்ளது என்று அவர் கூறுகிறார்.

1968 – 69 காலகட்டத்தில் அப்போதைய இளைஞர்கள் படை தேசம் முழுவதும் திரண்டு புரட்சி செய்ததன் விளைவாகத்தான் அயூப் கான் அதிபர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். ஆனால், ஜியா உல் ஹக் ராணுவ ஆட்சியில் மாணவர்கள் சங்கங்கள் நசுக்கப்பட்டது அந்நாட்டின் இளைஞர்கள் போராட்ட வியூகங்களுக்கு செக் வைத்தது. கல்வி நிலைய வளாகங்கள் அரசியல் ரீதியாக திரளமுடியாத நிலையை அடைந்தன.

அதன்பின்னர் தேசிய அளவில் வெகு சொற்பமான இளைஞர்கள் தலைமையிலான எழுச்சிகளையே கண்டுள்ளது. 2018 முதல் 2022 வரை ஆண்டுதோறும் மாணவர்கள் சங்கங்கள் மீதான தடையை நீக்கக் கோரி வருடாந்திர பேரணிகள் மட்டுமே நடந்தன. ஆனால் எந்த அரசியல் கட்சியும் அதற்கு செவி சாய்க்கவில்லை.

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் எஸ்எஃப்ஐ. ஏஐஎஸ்ஏ, டிஒய்எஃப்ஐ உள்ளிட்ட பல்வேறு மாணவர்கள், இளைஞர்கள் அமைப்புகளும் கலந்து கொண்டன. ஒரு ஜென்ஸீ படை திரண்டபோது, அதை இன்னும் இன்னும் பெரிதாக திரட்ட மாணவர்கள் சங்கங்கள் அவசியம் என்பதை உணர்த்துகிறது.

தீவிரவாத அச்சுறுத்தலும், குறுகிய இலக்குகளும்

சமூக செயற்பாட்டாளர்களால் மட்டுமே அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியாது. அவர்களுக்கு மாணவர்கள், இளைஞர்களின் உந்துவிசை அவசியம். அதேபோல், பாகிஸ்தானில் அமைதிவழிப் போராட்டங்கள் பலவும் தீவிரவாத செயல்களால் முடக்கப்படுவது வழக்கம். பலூசிஸ்தானுக்கு அதிகப்படியான பிராந்திய சுதந்திரம் கோரி போராட்டங்கள் நடத்தப்படுகிறது என்றால், அதையே வலியுறுத்தி நடக்கும் வன்முறை நிகழ்வுகள் இளைஞர்கள், மாணவர்களை அரசியல் நோக்கிச் செல்வதை தடுத்து விடுகின்றன.

பாகிஸ்தானின் போராட்டங்கள் பெரும்பாலும் பிராந்திய ரீதியிலான இலக்குகளுடன் சுருங்கிக் கிடப்பதும் கவனிக்கத்தக்கது. நாடு தழுவிய ஒற்றை இலக்குக்கான போராட்டம் என்பது பாகிஸ்தானில் அரிதாக இருக்கிறது.

சிஜேபி போராட்டம் பற்றி பாகிஸ்தான் இளைஞர்களின் குரல், “இளைஞர்களின் ஒற்றுமைதான் அந்தப் போராட்டத்தில் நாங்கள் கற்றுக்கொண்ட பாடம். பாகிஸ்தானில் பஞ்சாபிகள், பஸ்துன்கள், சன்னி, சியா முஸ்லிம்கள் என்று பிரிந்து கிடப்பதால் ஒற்றை இலக்கை நோக்கி பாகிஸ்தான் ஜென்ஸீ இளைஞர்களால் திரள முடியவில்லை” என்பதாகவே உள்ளது.

இதுதான் பாகிஸ்தான் ஜென்ஸீ இளைஞர்கள் இலங்கை, வங்கதேசம், நேபாளம், இந்தியாவின் இளைஞர்கள் போல் ஒன்றிணைந்து அந்நாட்டின் அரசை நோக்கிக் கேள்வி கேட்க, போராடவிடாமல் தடுப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Source link