ஜகார்த்தா: இந்தோனேசியாவில் அனாக் கிரகடாவ் எரிமலை வெடித்து சிதறியதால் 6 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன. 300க்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் புகழ்பெற்ற அனாக் கிரகடாவ் எரிமலை உள்ளது. இந்த எரிமலை திடீரென இன்று (செப்.6) வெடித்துச் சிதறியது. இதனால் வானத்தில் ராட்சத சாம்பல் மேகங்கள் உருவாக, விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட 170 விமான சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. ரத்து செய்யப்பட்ட விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகமானதால் பயணிகள் இடையே குழப்பம் ஏற்பட்டது.
ஜகார்த்தா உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 58 சர்வதேச விமான சேவைகள் உள்பட ஒட்டு மொத்தமாக 301 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
சுமத்ரா பகுதியில் 15000 மீட்டர் உயரத்திலும், ஜாவா பகுதியில் 6000 மீட்டர் உயரத்திலும் சாம்பல் புகை சூழ்ந்ததால் 200க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை முடங்கி உள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
