தமிழ்நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் கணிசமாகக் குறைந்துள்ளது தற்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த வருவாய் வீழ்ச்சி மாநிலப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்துப் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாயானது 10,329 கோடி ரூபாயாக பதிவாகியிருந்தது. ஆனால், தற்போதைய 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த வருவாய் 10,189 கோடி ரூபாயாக சரிவைக் கண்டுள்ளது.
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் மாநிலத்தின் ஜிஎஸ்டி வருவாயில் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தரவுகளைத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ள திமுகவின் முன்னாள் அமைச்சரான டி.ஆர்.பி.ராஜா, மாநிலத்தின் தற்போதைய நிதி நிலவரம் குறித்து தனது எச்சரிக்கையைப் பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதன்மையான வருவாய் ஈட்டும் இயந்திரம் தற்பொழுது ஒருவித சிவப்பு எச்சரிக்கையை நோக்கிக் காட்டத் தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ‘தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறது! இதேநிலை தொடர்ந்தால், செலவுகளைக் குறைப்பதா? மேலும் கடன் வாங்குவதா? என்ற கடினமான நிலைக்கு தமிழ்நாடு அரசு விரைவில் தள்ளப்படலாம்!
ஆகஸ்ட் மாத GST புள்ளிவிவரங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை. 2025 ஆகஸ்டில் 10,329 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாட்டின் GST வசூல், 2026 ஆகஸ்டில் 10,189 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
அதாவது -1% சரிவு!
இந்தியா +9%
கர்நாடகா +13%
குஜராத் +15%
தெலங்கானா +16%
உத்தரப் பிரதேசம் +19%
மகாராஷ்டிரா +8%
தமிழ்நாடு மட்டும் -1%!
சாதாரண மக்களுக்கு இந்த GST எண்ணைப் பற்றி ஏன் கவலை இருக்க வேண்டும்? ஏனென்றால், தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 38% SGST மூலமாக மட்டுமே வருகிறது. வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும் ஆனால் அதே நேரத்தில் கடன் சுமையையும் கட்டுப்படுத்த வேண்டும்.
இந்தக் கணக்கு சரியாக வர வேண்டுமென்றால் அரசின் வருவாய் கட்டாயம் வளர வேண்டும்.ஆனால் ஆகஸ்ட் மாத GST காட்டுவதோ அதற்கு நேர் எதிரான -1% சரிவு!
“ஒரு மாத புள்ளிவிவரத்தை வைத்து ஒரு வருடத்திற்கான போக்கைத் தீர்மானிக்க முடியாது” என்று சிலர் சொல்லலாம்.உண்மைதான். ஆனால் இந்தியா +9% வளரும்போது, நம்மோடு போட்டியிடும் முக்கிய மாநிலங்கள் அனைத்தும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும்போது,
தமிழ்நாடு மட்டும் -1%-ல் இருப்பதை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.இது நிச்சயம் ஒரு முக்கிய எச்சரிக்கை! இந்த நிலை தொடர்ந்தால்: பற்றாக்குறையாகும் பணத்தை எங்கிருந்து கொண்டு வரப் போகிறார்கள்?மேலும் கடன் வாங்கப் போகிறார்களா? வேறு வரிகளை உயர்த்தப் போகிறார்களா?
அல்லது சாலைகள், உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்கப் போகிறார்களா?வருவாய் இல்லாமல் பட்ஜெட் வெறும் காகிதக் கணக்குதான்! இந்த -1% GST சரிவு ஒரு தொடர்கதையாக மாறுவதை தமிழ்நாடு தாங்க முடியாது!இது கட்டுப்படுத்த முடியாத சரிவாக மாறுவதற்கு முன்பாவது இன்றைய தவெக அரசு விழித்துக்கொள்ளுமா? இந்த சரிவிக்கு என்ன காரணம் என்று அரசு தெளிவாக சொல்லவேண்டும்’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
