“இந்த நொடி முதல் தமிழகத்தின் கல்வி மாறுகிறது; இந்தியாவில் பிச்சை எடுத்த அமெரிக்கா?” அமைச்சர் ராஜ்மோகன் சுவாரசிய பேச்சு

சென்னையில் நடைபெற்ற பாடத்திட்ட தயாரிப்புக் குழு கூட்டத்தில், “இனி பள்ளிக் கல்வி குழந்தைகளை மையப்படுத்தியதாக மாறும்; கணிதம் கதைகளாகவும், புத்தகங்கள் வண்ணக் காணொளிகளாகவும் உருவெடுக்கும்” என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். ஏ.ஐ தொழில் நுட்பம் வரை மாணவர்களுக்குப் பிராம்ட் இன்ஜினியரிங் கற்றுத்தரப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற பாடத்திட்ட தயாரிப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டின் கல்வி முறையில் செய்யப்பட உள்ள புரட்சிகரமான மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளார். “இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வி முறை மாறுகிறது” என அறிவித்த அவர், ஏ.ஐ தொழில்நுட்பம், இஸ்ரோ உதவியுடன் அரசுப் பள்ளி மாணவர்கள் செயற்கைக்கோள் தயாரிப்பது மற்றும் வண்ணமயமான பாடப் புத்தகங்கள் எனப் பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்களை விவரித்தார்.

சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வரும் பாடத்திட்ட தயாரிப்புக் குழு கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: “இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வி மாறுகிறது; கற்றலை இனிமையான அனுபவமாக மாற்றுவோம். அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை மையப்படுத்திய கல்வியாக மாறப்போகிறது. அனைவருக்குமான, ஆரோக்கியமான கல்வியாக இருக்கப் போகிறது. அதோடு, பெற்றோரை மதிக்கும் கல்வித்திட்டமாக இருக்கும்.

கதைகளின் வடிவில் மாணவர்களுக்கு கணிதம் கற்றுத்தரப்படும். புத்தகப் பை சுமை இனி குறைக்கப்படும். அப்போது மாணவர்களின் மனச்சுமையும் குறையும். பாடப்புத்தகங்கள் வண்ணப்பட புத்தகங்களாக மாறும்.

எழுத்துக்கள் குறைந்து, வண்ணப்படங்கள் அதிகமாக்கப்படும். அந்த வண்ணப்படங்கள் , குழந்தைகளுடன் பேசும். அதில் ஒரு கியூஆர் கோடு இருக்கும்; அதை ஸ்கேன் செய்து பார்த்தால், அது காணொளியாக மாறும். ஏ.ஐ தொழில்நுட்பத்தின் நுணுக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும்.

கேமரா வந்துவிட்டது ஓவியர்கள் அழிந்து போவார்கள் என்று சொன்னது உலகம். மராவை அறிவியல் கண்டுபிடித்த பிறகு தான் அதனுடன் போட்டி போடக்கூடிய அளவுக்கு கேமராவில் எடுக்க முடியாத கோடுகளை உருவாக்கி பிக்காசோ என்ற ஒரு ஓவியன் உலக புகழ் பெற்றான்.

ஒரு கணிப்பொறியை கண்டுபிடித்து கொடுத்தது அறிவியல். கணிப்பொறி வந்துவிட்டது, இனிமேல் இந்தியாவில் கிளர்க்குகளுக்கு வேலையே இருக்காது என்று சொன்னார்கள். கணினியில் சிறந்த உலக நாடுகளின் நிறுவனங்களுக்கு எல்லாம் இந்தியாவிலிருந்து தலைமைத்துவம் வாய்ந்த மனிதர்கள் தான் தலைவர்களாக இருக்கிறார்கள்.

நம்ம இந்தியாவில் அமெரிக்கா ஒரு பிச்சை எடுத்தது. அந்த பிச்சை சுந்தர் பிச்சை. தமிழ் வழியில் படித்த அந்தப் பையன் இல்லாவிட்டால் இன்றைக்கு கூகுளே இல்லை. அப்படி என்றால் அச்சப்பட வேண்டாம், ஏ.ஐ யாருடைய வேலையையும் பறிக்காது. அதற்கு பதில் அதற்கு தேவையான பிராம்ட் இன்ஜினியரிங் எப்படி மாணவர்களுக்கு கற்றுத் தருவது என்பதை நாங்கள் கல்வி திட்டத்தில் கொண்டு வரப் போகிறோம்.

அதேபோல, பெருமையாக இருக்கிறது, நேற்றைய தினம் முதலமைச்சர் விஜயை நானும் மயில்சாமி அண்ணாதுரையும் சந்தித்தோம், இன்றைக்கு இஸ்ரோவின் தலைவர் இருக்கிறார், இவர்கள் அறிவியல் தமிழர்கள்.

நம்முடைய வீட்டில் அனைவருமே நிலாவை காட்டி சோறு ஊட்டும் நிலா சோறு சாப்பிட்டு இருப்போம். இந்த கையை வைத்து நம்முடைய மரபான விளையாட்டில் ஒரு விளையாட்டை சொல்லித் தருவார்கள். சோறு போட்டு, பருப்பு கடைந்து நல்லா பிசைந்து கையை மூடிக்கொண்டு ஒரு வாய் எடுத்து, உனக்கு ஒருவாய். அம்மாவுக்கு ஒருவாய், அப்பாவுக்கு ஒரு வாய் எடுத்து ஊட்டுவார்கள். அக்காவுக்கு கடைசியாக கட்டை விரலை அசைத்து ஒரு கேப் விடுவார்கள். கடைசியாக அந்த நிலாவுக்கு என்று நிலாவுக்கு சோறு ஊட்டுவார்கள். அப்படி ஒரு மரபான சிந்தனை இருக்கிறது. 

நம்முடைய இந்த வேரை மதிக்க வேண்டும். அதே சமயம் இஸ்ரோவின் உதவியோடு பள்ளிக்கூட குழந்தைகள் இந்த சேட்டிலைட்டுகளை உருவாக்கி அதற்கு இஸ்ரோவில் இடம் அளித்தால் நம்முடைய அரசுப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் உருவாக்கிய சேட்டிலைட்டுகள் சந்திரனை வட்டமிடும் அதற்கான கல்வி திட்டத்தை முன்னிட்டு நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்” என்று அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.

Source link