“இனிமேல் அவருக்கு தோல்வி இல்லாமல் வெற்றி மட்டும் கிடைக்க வேண்டும்”

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில், இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இதில் ‘கன்னி மாடம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆலிஷா மிராணி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், சஞ்சனா நமீதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர்கள் சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நிகழ்வில் இயக்குநர் பேரரசு பேசுகையில், “ஆகாயம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் வந்திருக்கும் நாகராஜை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர் அவரை நேரில் சந்தித்தபோது, சினிமா மீதான அவரது ஆர்வமும், கதை சொல்லும் திறமையும் என்னை மிகவும் கவர்ந்தது. நாகராஜ் மிகப்பெரிய திறமைசாலி. அவரது ‘தினந்தோறும்’ படத்தில் அவர் நடித்த விதமும், கதாபாத்திரத்தை கையாண்ட விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இடையில் அவரது வாழ்க்கையில் தடுமாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அதிலிருந்து அவர் மீண்டு வந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

சினிமாவில் வெற்றியடைவதற்கு ஒரு திறமை வேண்டும். அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் இன்னொரு திறமை வேண்டும். பலர் வெற்றியை அடைகிறார்கள், ஆனால் அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகிறார்கள். ஒருவர் தனது வெற்றிக்கான காரணத்தையும், தோல்விக்கான காரணத்தையும் தானே ஆராய வேண்டும். அந்த வகையில், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட தடுமாற்றங்களை உணர்ந்து, தன்னைத் திருத்திக் கொண்டு மீண்டும் வந்திருக்கும் நாகராஜ் இன்று ஒரு தெளிவான மனிதராக நிற்கிறார். ‘தினந்தோறும்’ நாகராஜ் வெற்றியை அடைந்தவர் என்றால், ‘ஆகாயம்’ நாகராஜ் அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளும் திறமையுடன் வந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இன்று வெற்றி பெற்றிருக்கும் பல இயக்குநர்களின் வளர்ச்சிக்குப் பின்னால் நாகராஜின் பங்களிப்பும் இருக்கிறது. பலருக்கு தனது திறமையின் மூலம் உதவியிருக்கிறார். ‘தினந்தோறும்’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்தபோதே, இயல்பான வசனம், எதார்த்தமான நடிப்பு, உடல்மொழி என அனைத்திலும் அவர் ரசிகர்களைக் கவர்ந்தார். அப்படிப்பட்ட ஒரு கலைஞர் மீண்டும் ‘ஆகாயம்’ மூலம் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் நாகராஜ் மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். தொடர்ந்து படங்கள் இயக்க வேண்டும். இனிமேல் அவருக்கு தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி, வெற்றி, வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும்” என்று வாழ்த்தினார். 

Source link