இனிமே லைசென்ஸ் டிஜிட்டல் தான்: செப்டம்பர் 13 முதல் புதிய வசதி – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு – driving licence goes digital in tamil nadu new facility to begin from september 13

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை (RC) மின்னணு முறையில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் புதிய நடைமுறை அறிமுகமாகிறது. செப்டம்பர் 13, முதல் ஒரு வருடத்திற்கு இலவசமாக டிஜிட்டல் ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.

ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) ஆகியவற்றை இனி மின்னணு முறையில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் கடந்த 2ஆம் தேதி முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், இதற்கான அரசாணையை உள்துறை (போக்குவரத்து VII) துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் தேர்வு அல்லது வாகனப் பதிவு நிறைவடைந்த நாளிலேயே சம்பந்தப்பட்டவர்கள் தங்களது ஓட்டுநர் உரிமம் மற்றும் RC-யை டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலவசமாக பதிவிறக்கம்

வரும் 13.09.2026 முதல் ஓட்டுநர் உரிமம் மற்றும் RC ஆகியவற்றை பொதுமக்கள் ஒரு வருட காலத்திற்கு இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான நடைமுறைகள் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களுக்கு ஏற்ப செயல்படுத்தப்படும்.

QR மூலம் சரிபார்ப்பு

பதிவிறக்கம் செய்யப்படும் ஓட்டுநர் உரிமம் மற்றும் RC-யில் QR குறியீடு இடம்பெறும். இதனை ஸ்கேன் செய்வதன் மூலம், அரசின் அசல் மின்னணு ஆவணங்களுடன் தகவல்களை சரிபார்க்க முடியும். மேலும், இந்த ஆவணங்கள் அரசின் m-Parivahan மற்றும் DigiLocker வசதிகளுடனும் இணைக்கப்படும்.

அச்சுப் பிரதிக்கும் அனுமதி

டிஜிட்டல் ஆவணத்தை பதிவிறக்கம் செய்து, Parivahan இணையதளம் மூலம் பொதுமக்கள் அச்சிட்டும் பயன்படுத்தலாம். இவ்வாறு பெறப்படும் தெளிவான அச்சுப் பிரதியும், அரசு வழங்கிய ஓட்டுநர் உரிமம் மற்றும் RC-க்கு மாற்றாக ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அங்கீகரித்த வசதி மூலம் அச்சிட விரும்புபவர்களிடம் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

அரசு அலுவல்களில் ஏற்றுக்கொள்ளப்படும்

ஓட்டுநர் உரிமம் மற்றும் RC-யின் மின்னணு ஆவணம் அல்லது அதன் தெளிவான அச்சுப் பிரதி, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பதிவு, அனுமதி, சரிபார்ப்பு, அபராதம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும், 12.09.2026க்குப் பிறகு ஓட்டுநர் உரிமம் மற்றும் RC-யை கட்டாயமாக அச்சு வடிவில் சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் கோரக்கூடாது எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை பெறுவதற்கும், எடுத்துச் செல்வதற்கும் பொதுமக்களுக்கு கூடுதல் வசதி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link