எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: அக்டோபர் 1 முதல் ஏ.டி.எம் விதிமுறைகளில் மாற்றம்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ), வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் வகையில் சம்பளக் கணக்கு மற்றும் அடிப்படைச் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான ஏ.டி.எம் பரிவர்த்தனை விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ), தனது சம்பளக் கணக்கு (Salary Account) வைத்திருப்பவர்களுக்கான ஏ.டி.எம் பரிவர்த்தனை விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்தப் புதிய நடைமுறைகள் வரும் 2026, அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகின்றன.

சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான மாற்றங்கள்:

பிற வங்கி ஏ.டி.எம்களில் (ATMs / ADWMs) எஸ்.பி.ஐ சம்பளக் கணக்கு வாடிக்கையாளர்கள் வரைமுறையின்றிப் பயன்படுத்தி வந்த இலவசப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை தற்போது பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இலவசப் பரிவர்த்தனை வரம்பு: இதுவரை மாதத்திற்கு 10 இலவசப் பரிவர்த்தனைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், அக்டோபர் 1 முதல் இது 5 பரிவர்த்தனைகளாகக் குறைக்கப்படுகிறது. இதில் பணம் எடுப்பது (Financial) மற்றும் இருப்புச் சோதனை போன்ற பிற சேவைகள் (Non-Financial) அனைத்தும் அடங்கும்.

கட்டண விவரங்கள்: இலவச வரம்பு முடிந்த பிறகு செய்யப்படும் ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் ரூ. 23 + ஜி.எஸ்.டி கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல, பணமில்லா இதர சேவைகளுக்கு ரூ. 11 + ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும். இந்தக் கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதர கணக்குதாரர்களுக்கான விதிமுறைகள்:

சாதாரண சேமிப்புக் கணக்குகள்: சம்பளக் கணக்கு அல்லாத பிற கணக்கு வைத்திருப்பவர்களுக்கான ஏ.டி.எம் பரிவர்த்தனை விதிகளில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் பிற வங்கி ஏ.டி.எம்களில் தொடர்ந்து மாதத்திற்கு 5 இலவசப் பரிவர்த்தனைகளைப் பெறலாம். வரம்பைக் கடந்தால் வழக்கமான கட்டணங்கள் தொடரும்.

எஸ்.பி.ஐ ஏ.டி.எம்களைப் பயன்படுத்துவோர்: எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் சொந்த வங்கியின் ஏ.டி.எம்களைப் பயன்படுத்தும்போது மாதத்திற்கு 10 இலவசப் பரிவர்த்தனைகள் பெறும் நடைமுறை எந்த மாற்றமுமின்றித் தொடரும்.

கார்டு இல்லாத பணப் பரிவர்த்தனை (Cardless Cash Withdrawal): எஸ்.பி.ஐ மற்றும் பிற வங்கி ஏ.டி.எம்களில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் சேவைக்குத் தொடர்ந்து எந்தக் கட்டணமும் இன்றி வரம்பற்ற இலவசச் சேவை வழங்கப்படும்.

அடிப்படை சேமிப்புக் கணக்கு (BSBD Accounts) மாற்றங்கள்:
அடிப்படைச் சேமிப்புக் கணக்கு (BSBD) வைத்திருப்பவர்களுக்கும் அக்டோபர் 1 முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

BSBD கணக்குதாரர்கள் வங்கி கிளைகள், ஏ.டி.எம், மைக்ரோ ஏ.டி.எம், ஆதார் சார்ந்த பணப்பரிவர்த்தனை (AePS) மற்றும் CASH@POS ஆகிய அனைத்து வழிகளிலும் சேர்த்து மாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாகப் பணம் எடுக்க முடியும்.

4 முறைக்கு மேல் எடுக்கப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ. 15 + ஜி.எஸ்.டி கட்டணமாக வசூலிக்கப்படும்.

இருப்பினும், யு.பி.ஐ (UPI), ஐ.எம்.பி.எஸ் (IMPS), நெஃப்ட் (NEFT), ஆர்.டி.ஜி.எஸ் (RTGS) போன்ற டிஜி..ட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்குத் தொடர்ந்து எந்தக் கட்டணமும் இல்லை என எஸ்.பி.ஐ தெளிவுபடுத்தியுள்ளது.

Source link