இன்னைக்கு வரி; நாளைக்கு ரத்து; மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் டிரம்பை விமர்சித்த பெல்ஜியம் பிரதமர்

மும்பை: “அவர்களே வரி விதிக்கிறார்கள்; ரத்து செய்கிறார்கள். பின், மீண்டும் அமல்படுத்துகிறார்கள்,” என, அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு கொள்கையை பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர் மறைமுகமாக விமர்சித்தார்.

அரசுமுறை பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ள ஐரோப்பிய நாடான பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர், மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்த இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த உயர்மட்ட பேச்சில் பங்கேற்றார். அதில், அமெரிக்க வரி விதிப்பு கொள்கையையும், அதிபர் டிரம்பையும் மறைமுகமாக விமர்சித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

உலகில் நிலவும் வர்த்தக தடைகள், சந்தை முடக்கங்கள், கூடுதல் வரி விதிப்புகளுக்கு எதிராக குரல்கள் ஒலிக்க தொடங்கி உள்ளன. வர்த்தகத்தை முடக்கும் இந்த செயலை சிலர், தன்னிச்சையாக செய்கிறார்கள். திங்கட்கிழமை ஒரு முடிவை எடுக்கிறார்கள்; புதன்கிழமை அதை ரத்து செய்கிறார்கள். மீண்டும் சனிக்கிழமை அதே வரியை விதிக்கிறார்கள்.

ஆனால், மற்ற சிலரோ சந்தையை திட்டமிட்டு, கட்டமைப்பிற்குள் சிதைக்கும் வேறுபட்ட அணுகுமுறையை கையாள்கிறார்கள். சீனா போன்ற நாடுகள், பிற நாடுகளை தங்கள் சார்ந்திருக்க வைக்க திட்டமிட்டு சந்தைகளை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. திறந்தவெளி சந்தைகள் மற்றும் வலுவான பொருளாதார கூட்டாண்மைகள் தற்போதைய சூழலில் மிகவும் அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link