இன்று மீண்டும் கூடும் பார்லிமென்ட் கூட்டத்தில் புயல் வீசும்! பல பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தம்

– நமது சிறப்பு நிருபர் –

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடவுள்ள நிலையில், பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாக உள்ளன. மறுபுறம், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், இரண்டாவது வாரத்திலும் பார்லிமென்டில் புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘நீட்’ எனப்படும், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வவின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தை கையில் எடுத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே, அமெரிக்காவில் இருந்து திரும்பி, கடந்த ஜூன் 20ல் போராட்டத்தை தொடங்கினார்.

இதற்கு ஆதரவாக, லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் களத்தில் குதித்தார். இதனால், போராட்டம் நடந்த டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் குவிந்தனர்.

பேரணி

இந்நிலையில், பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. அப்போது, பார்லி.,யை நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும், மாணவர்களும் பேரணி நடத்தினர். கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால், போலீசாரும் பதிலுக்கு தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை, பார்லி.,யை நடத்த விட மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தன.

இதனால், கூட்டத்தொடர் தொடங்கிய முதல் ஐந்து நாட்கள், லோக்சபா, ராஜ்யசபா என, இரு சபைகளும் எந்த அலுவல்களும் இன்றி முடங்கின.

இந்தச் சூழலில், மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதையடுத்து, டில்லி ஜந்தர் மந்தரில் 36 நாட் களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின், பார்லிமென்ட் இன்று மீண்டும் கூடவுள்ள நிலையில், கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் சுமுகமாக நடத்த விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


வர்த்தக ஒப்பந்தம்

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு, விலைவாசி உயர்வு, பெட்ரோலில் எத்தனால் கலப்பு, இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்ட மிட்டுள்ளன.

எனவே, இந்த வாரமும் பார்லி.,யில் காரசார விவாதங்களும், அமளியும் நீடிக்கும் என்பதால், புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்!
கூட்டத்தொடரின் முதல் வாரம் அமளியால் முடங்கிய நிலையில், இரண்டாவது வாரத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்ற, மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இரு சபைகளிலும் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, அரசு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்களை கசிய விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா, லோக்சபாவில் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
‘வந்தே மாதரம்’ தேசிய பாடலுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு மற்றும் மரியாதையை நீட்டிக்கும் வகையில், தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வரும், ‘வெளிநாட்டு நன்கொடைகள் முறைப்படுத்துதல் திருத்த மசோதா – 2026’ம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

‘இ – 20 ஜனதா கட்சி!’
பெட்ரோலில் எத்தனால் கலப்பதை கட்டாயமாக்குவதற்கு எதிராக, ‘இ – 20 ஜனதா கட்சி’ என்ற பெயரில் புதிய இயக்கம் உருவெடுத்துள்ளது. எத்தனால் கலக்கப்படாத பெட்ரோல் மற்றும் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் என இரண்டையும் சந்தையில் விற்பனை செய்ய வேண்டும். தேவையான பெட்ரோலை நுகர்வோரே தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே, இந்த இயக்கத்தின் முக்கிய கோரிக்கை.
இந்த கோரிக்கைக்கு ஆதரவாக, டில்லி டாக்சி மற்றும் சுற்றுலா வாகன சங்கம், வரும் ஆக., 4ல், பார்லிமென்ட் நோக்கி பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தையும் பார்லி.,யில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Source link