தி.மு.க., ஆட்சியில் சட்ட குளறுபடிகள் அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு

பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று வெளியிட்ட அறிக்கை:

காவிரி நதி நீர், மேகதாது அணை பிரச்னை தொடர்பாக, முதல்வர் விஜய் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், பல கேள்விகளை எழுப்பி இருப்பது உண்மைக்கு முரணானது.

விவசாயிகளின் வாழ்வாதாரம், மாநிலத்தின் குடிநீர் பாதுகாப்பு மற்றும் தமிழகத்தின் சட்டப்பூர்வ நீர் உரிமை போன்றவற்றை பாதுகாப்பதில், தமிழக அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எடுத்துரைப்பு

காவிரி விவகாரம் தொடர்பாக, முதல்வர் விஜய் மே, 27ம் தேதி பிரதமரை நேரில் சந்தித்து விரிவாக எடுத்துரைத்தார். அப்போது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புபையும் அமல்படுத்த வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என, பிரதமரிடம் வலியுறுத்தினார்.

அதன்பின், ஜூன் 19ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதேநாளில், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கர்நாடக அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதையும், தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

இப்படி தமிழகத்தின் நீர் உரிமையை காக்க சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், அனைத்து விதமான நடவடிக்கைகளையும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

ஆனால், ஸ்டாலின் முதல்வராக இருந்த போது தான், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்தது.

முன்வைக்கவில்லை

அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது உரிய கவனம் செலுத்தவில்லை; உரிய வாதங்களையும், தி.மு.க., அரசு முன்வைக்கவில்லை. இதனால் தான், மூன்று முறை அரசின் மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தி.மு.க., ஆட்சியில் நடந்த சட்டக்குளறுபடிகளால் தான், காவிரி விவகாரம், இன்று மிகப்பெரிய சோதனையாக உருவெடுத்துள்ளது. ஆனால், இதைப்பேசி, தமிழகத்தின் உரிமை குரலை திசை திருப்ப நாங்கள் விரும்பவில்லை.

அப்படிப்பட்ட குறுகிய அரசியல் நோக்கம் எங்களுக்கு இல்லை. இதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். காவிரி விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வழிமுறைகளையும், த.வெ.க., அரசு தொடர்ந்து முன்னெடுக்கும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Source link