கட்டுரை தகவல்எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர்பதவி, பாதுகாப்பு செய்தியாளர்
பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
ஒரு அரசாங்கத்தின் முதல் கடமை, அதன் மக்களைப் பாதுகாப்பதே என்று பல ஆண்டு காலமாக எண்ணற்ற தலைவர்கள் கூறியுள்ளனர்.
2001 செப்டம்பர் 11ஆம் தேதி, அதைச் செய்வதில் அமெரிக்கா வெளிப்படையாகத் தோல்வியடைந்தது.
உளவுத் தகவல்கள் இருந்தன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, யாரும் சரியான நேரத்தில் அந்தத் தகவல்களை ஒன்றிணைத்துப் பார்க்கவில்லை.
9/11 என அறியப்பட்ட அமெரிக்கா மீதான தாக்குதல்கள், அதற்கான பதில் நடவடிக்கைகளுடன் சேர்ந்து, இந்த நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளுக்கான ஒரு தலைமுறையின் வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை கொள்கைகளை வரையறுத்தன.
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி, அல்கொய்தாவின் தற்கொலைத் தாக்குதலை நடத்திய விமானிகள், கடத்தப்பட்ட அந்த விமானங்களை உலக வர்த்தக மையத்தின் மீது மோதச் செய்துகொண்டிருந்தபோது, நான் மத்திய கிழக்கு அலுவலகத்தில் எனது பணியை முடித்துக்கொண்டிருந்தேன்.
பாலத்தீன டாக்சி ஓட்டுநர் ஒருவர், ஜெருசலேமிற்கு மேற்கே பைன் மரங்கள் நிறைந்த மலைப்பகுதி வழியாக என்னை டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். திடீரென அவர் காரில் ஒலித்துக் கொண்டிருந்த வானொலியின் சத்தத்தை அதிகரித்தார்.
“அமெரிக்காவில் மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது” என்று அவர் கூறினார். அவர் மிகைப்படுத்திக் கூறவில்லை. அந்த நாளில் 2,977 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதல்கள் திடீரென நிகழவில்லை.
2001ஆம் ஆண்டுக்கு முன்பே அல்-கொய்தா அமைப்பையும், நாடு கடத்தப்பட்டிருந்த ஒசாமா பின்லேடன் குறித்தும் சிஐஏ பல ஆண்டுகளாக அறிந்திருந்தது. அவரைத் தேடிப் பிடிப்பதற்காக ஒரு சிறப்புப் பணிக்குழுவையும் சிஐஏ அமைத்திருந்தது.
செப்டம்பர் 11ஆம் தேதி தாக்குதல்கள் நடைபெற்ற ஒன்பது நாட்களுக்குப் பிறகு, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் “பயங்கரவாதத்திற்கு எதிரான போரை” அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளில், அட்லாண்டிக்கின் இருபுறமும் உளவுத் துறையில் பல வெற்றிகளும் தோல்விகளும் ஏற்பட்டுள்ளன.
முறியடிக்கப்பட்ட சதித்திட்டங்கள், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சந்தேக நபர்கள் ஆகியவை இந்த வெற்றிகளில் அடங்கும்.
ஆனால், ஒட்டுமொத்த நிலை என்ன?
அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு கடந்த 25 ஆண்டுகளில் உளவுத் தகவல் சேகரிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் மூலோபாயத் திட்டமிடல் ஆகியவை எவ்வாறு மாறியுள்ளன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தாக்குதல்கள் நடந்தபோது ஜார்ஜ் டபிள்யூ புஷ் புளோரிடாவில் உள்ள ஒரு பள்ளியில் இருந்தார்.
ஒரு மாபெரும் உளவுத்துறை தோல்வி
9/11 என்பது மிகப்பெரிய உளவுத்துறைத் தோல்வி என்பதை யாராலும் கேள்விக்குள்ளாக்க முடியாது.
இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், அமெரிக்க உளவுத்துறை சமூகத்தில் ஏற்பட்ட கற்பனைத் தோல்வி அது.
அந்த நேரத்தில் சிஐஏ மற்றும் எஃப்பிஐ ஆகிய இரு அமைப்புகளிடமும் இருந்த தகவல்கள் முறையாகப் பகிரப்பட்டிருந்தால், அந்த நிகழ்வைத் தடுத்திருக்க முடியும்.
இதனைத் தொடர்ந்து வெளியான 9/11 ஆணையத்தின் அறிக்கை, அமெரிக்க அரசாங்கத்தில் “கற்பனை, கொள்கை, திறன்கள் மற்றும் நிர்வாகத்தில் ஏற்பட்ட தோல்விகளை” குற்றம் சாட்டியது.
சிஐஏ மற்றும் எஃப்பிஐ ஆகியவை உளவுத் தகவல்களை முறையாக மதிப்பிடவும், ஒன்றுக்கொன்று தகவல்களைப் பகிரவும், சதித்திட்டத்தை முறியடிக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்கவும் தவறிவிட்டதாக அந்த அறிக்கை முடிவு செய்தது.
இந்த மிக அடிப்படையான பாடம், முழுமையாக இல்லாவிட்டாலும், பெருமளவில் கற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
2001ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, மேற்கத்திய உளவு அமைப்புகளுக்கு இடையிலான தகவல் பகிர்வு தற்போது எண்ணற்ற மடங்கு மேம்பட்டுள்ளது.
உதாரணமாக, எம்ஐ5 மற்றும் காவல்துறை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு (Police Counter Terrorism) ஆகியவற்றுக்கு இடையிலான பழைய போட்டிகள் மறைந்துவிட்டன.
முதலில் பிரிட்டன் முழுவதும் ஆங்காங்கே அமைக்கப்பட்ட பிராந்திய ‘ஒருங்கிணைப்பு மையங்கள்’ மூலமாகவும், தற்போது மிக சமீபத்தில் லண்டனில் அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு கொண்ட பயங்கரவாதத் தடுப்பு செயல்பாட்டு மையம் நிறுவப்பட்டதன் மூலமாகவும் இது ஏற்பட்டுள்ளது.
இங்கு எம்ஐ5 உளவுத்துறை அதிகாரிகள், பயங்கரவாத சதித்திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான நேரடி நடவடிக்கையை மேற்கொள்வது தங்கள் பணியாகக் கொண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு மிக அருகில், உண்மையில் அவர்களுக்கு மிக அருகிலேயே அமர்ந்திருக்கக்கூடும்.
அதேபோல், எப்ஃபிஐ-யைச் சேர்ந்த அமெரிக்க மத்திய அரசின் முகவர் ஒருவருக்கோ அல்லது ஜிசிஹெச்கியூ -யில் இருந்து தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்ட மொழி நிபுணர் ஒருவருக்கோ அருகிலும் அவர்கள் அமர்ந்திருக்கக்கூடும்.
9/11 தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க உளவுத்துறையிலும் அடிப்படையான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. வாஷிங்டன் டி.சி.க்கு வெளியே தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் அமைக்கப்பட்டது. அமெரிக்காவின் 18 தனித்தனி உளவுத்துறை அமைப்புகளுக்கு இடையே தேவையான இடங்களில் தகவல்கள் பகிரப்படுவதை உறுதி செய்வதற்காக தேசிய உளவுத்துறை இயக்குநர் என்ற பதவியும் உருவாக்கப்பட்டது.
சி.ஐ.ஏ-வுக்கும் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த அதன் இணை அமைப்பான ரகசிய உளவுத்துறைக்கும், (பொதுவாக எம்ஐ6 என்று அழைக்கப்படும் அமைப்பு) இடையிலான உறவு உலகிலேயே மிகவும் நெருக்கமானதாக இருக்கலாம்.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே உளவுத் தகவல்களை ஒருங்கிணைக்கும் ‘ஃபைவ் ஐஸ்’ கூட்டணி இதற்கு மேலும் வலு சேர்க்கிறது.
எனினும், இரட்டைக் கோபுரங்கள் மீது விமானங்கள் மோதிய பின்னரும், உளவுத்துறை, தகவல் மதிப்பீடு மற்றும் மூலோபாயத் திட்டமிடலில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய தோல்விகள் தொடர்ந்து நிகழ்ந்துள்ளன.
2003ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான இராக் மீதான படையெடுப்புக்கு முந்தைய காலகட்டத்தில், எம்ஐ6 தனது உளவுத் தகவல்கள் அரசியல்மயமாக்கப்படுவதற்கு விவேகமற்ற வகையில் அனுமதித்தது.
இதனால், 1950கள் மற்றும் 60களில் இரட்டை முகவரான கிம் பில்பி மற்றும் பிற சோவியத் உளவாளிகளால் ஏற்பட்ட துரோகங்களுக்குப் பிறகு, அந்த அமைப்பு தனது நற்பெயரில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தது.
பட மூலாதாரம், Bloomberg via Getty Images
படக்குறிப்பு, ஒரு உளவுத்துறை ஊழலால் எம்ஐ6 பெரும் பாதிப்புக்குள்ளானது.
இராக் அதிபர் சதாம் உசேன் தலைமையிலான அரசு தொடர்ந்து பேரழிவு ஆயுதங்களைக் (WMDs) வைத்திருந்தது என்பதற்கான ஆதாரங்களை வழங்குமாறு வாஷிங்டனிடமிருந்து இருந்து கடுமையான அரசியல் அழுத்தம் இருந்த பின்னணியில், எம்ஐ6, பின்னர் குறைபாடுடையதாகத் தெரியவந்த உளவுத் தகவல்களை பிரதமர் டோனி பிளேயரின் தலைமையிலான அரசாங்கத்துக்கு வழங்கியது.
இராக்கில் கடந்த காலத்தில் பேரழிவு ஆயுதங்கள் இருந்தது உண்மைதான். ஆனால், 1991 வளைகுடாப் போருக்குப் பிறகு அவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன.
2003ஆம் ஆண்டு இராக் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து, களத்தில் உள்ள முகவர்களிடமிருந்து வரும் மூல உளவுத் தகவல்களை, சிஎக்ஸ் என்று அழைக்கப்படும் அந்தத் தகவல்களை, எம்ஐ6 மதிப்பிடும் முறையில் முழுமையான மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
இன்று, இரான், வட கொரியா போன்ற இடங்களில் இருந்தோ அல்லது அல்-கொய்தா போன்ற தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுக்களுக்குள்ளிருந்தோ ஆதாரங்களிடமிருந்து உளவுத் தகவல்களைச் சேகரிப்பது யாருடைய பணியோ, அந்த முகவர்களை கையாளும் அதிகாரிகளுக்கும், அந்த உளவுத் தகவல்களைச் சரிபார்த்து கேள்விக்குள்ளாக்குவது யாருடைய பணியோ, அந்த அறிக்கைக் குழுவுக்கும் இடையே தெளிவான பிரிவு உள்ளது.
பல நேரங்களில், இந்த அறிக்கைக் குழு அந்தத் தகவல்களை மீண்டும் அனுப்பி, அதற்கு கூடுதல் ஆதாரங்களை வழங்குமாறு கோரும்.
“[2003ஆம் ஆண்டு] இராக் போர் மிகவும் மோசமாகக் குறைபாடுடைய உளவுத் தகவல்களின் அடிப்படையில் நடைபெற்றது. அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டோமா? இல்லை. நாம் பாடம் கற்றுக்கொள்வதில் மோசமாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன்… ஒரு தளபதி என்ற முறையில், நாம் மூலோபாயத் தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது மிகவும் வெளிப்படையாகத் தெரிந்தது” என்கிறார் இராக்கில் டிவிஷனல் கமாண்டராகப் பணியாற்றிய ஜெனெரல் சர் ரிச்சர்ட் ஷிரெப்ஃ.
இராக் மீதான படையெடுப்புக்குப் பிறகு மீண்டும் ஒரு விசாரணை நடைபெற்றது. இது இறுதியில் பட்லர் ஆய்வுக்கு வழிவகுத்தது.
இராக்கின் பேரழிவு ஆயுதத் திட்டம் தொடர்பாக பிரிட்டன் வசம் இருந்த உளவுத் தகவல்கள் “மிகவும் குறைபாடுடையதாகவும், சரிபார்க்கப்படாத ஆதாரங்களை அதிகமாகச் சார்ந்திருந்ததாகவும்” இந்த ஆய்வு முடிவு செய்தது.
பயங்கரவாத சதித்திட்டங்களை முறியடிப்பதில், எம்ஐ5 எனப்படும் பாதுகாப்பு சேவை அமைப்பு, எண்ணற்ற மறுக்க முடியாத வெற்றிகளுக்கு மத்தியில், தோல்விகளையும் சந்தித்துள்ளது.
“9/11க்குப் பிறகு, பிரிட்டனுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்தது அல்-கொய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் குழுக்களிடமிருந்து வந்த பயங்கரவாத அச்சுறுத்தல் தான் என்று மதிப்பிடப்பட்டது” என்கிறார் 2007 முதல் 2013 வரை எம்ஐ5 -ஐ வழிநடத்திய லார்ட் ஜொனாதன் எவன்ஸ்.
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, டோனி பிளேர், ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுடன் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்’ இணைந்தார்.
ஆனால், அந்த காலகட்டத்தில் 20,000-க்கும் அதிகமான “கவனத்துக்குரிய நபர்கள்” என்ற பட்டியலும், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான விசாரணைகளும் நடைபெற்ற நிலையில், எந்த வழக்குகளுக்கு முன்னுரிமை அளிப்பது என்பது எம்ஐ5 எதிர்கொண்டது தினசரி சவாலாக இருந்தது. அவற்றை இன்றும் அது எதிர்கொள்கிறது.
அது எப்போதும் சரியான முடிவுகளை எடுத்ததில்லை.
2005ஆம் ஆண்டு, 52 பேர் கொல்லப்பட்ட லண்டன் தற்கொலைக் குண்டுவெடிப்புகளைத் தடுக்க எம்ஐ5 தவறியது.
இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என்று பின்னர் தெரியவந்த முகமது சித்திக் கான் குறித்து பாதுகாப்பு சேவைக்குத் தகவல் இருந்தது. ஆனால், அவர் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் குறித்து அந்த அமைப்புக்குத் தெரியவில்லை.
2017ஆம் ஆண்டு மான்செஸ்டர் குண்டுவெடிப்பும் இதுபோன்ற மற்றொரு சமீபத்திய தவறாகும்.
இன்று பயங்கரவாத அச்சுறுத்தல் மறைந்துவிடவில்லை. ஆனால், “நிலைமை மாறியுள்ளது. அரசு சாரா பயங்கரவாதம் தொடர்ந்து தீவிரமான கவலையாக உள்ளது. ஆனால், அரசு சார்ந்த அச்சுறுத்தல்கள்… தொடர்ந்து தீவிரமடைந்துள்ளன. அரசு சாரா பயங்கரவாதத்தைப் போலவே, குறைந்தபட்சம் அதே அளவிலான தேசியப் பாதுகாப்பு கவலையாக அவை மாறியுள்ளன. இந்த அச்சுறுத்தல்கள் வெவ்வேறு வடிவங்களில் ரஷ்யா, இரான், அவற்றின் பதிலி அமைப்புகள் மற்றும் சீனா ஆகியவற்றிடமிருந்து வருகின்றன” என்கிறார் லார்ட் எவன்ஸ்.
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, இரானுடனான போர் ஒரு மூலோபாயத் தவறான கணிப்பாகக் கருதப்படுகிறது.
இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலுடன் இணைந்து இரான் மீது தாக்குதல் நடத்த எடுத்த முடிவை, அமெரிக்க உளவுத்துறையின் கற்பனைத் தோல்வியாகவும் வாதிடலாம்.
வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் அனைத்து கூட்டாளி நாடுகளுக்கும், இரான் பதிலடி கொடுத்து ஹோர்முஸ் நீரிணையை மூடும் தீவிரமான ஆபத்து இருப்பது தெரிந்திருந்தது.
அதற்கான அனைத்து எச்சரிக்கைகளும் இருந்தன. எனினும், இரான், தான் அச்சுறுத்தியபடி செயல்பட்டு, உலகளாவிய எரிசக்திச் சந்தைகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியபோது, டிரம்புக்கு அதனை எதிர்கொள்வதற்கான மாற்று உத்தி இல்லாதது போல் தெரிந்தது.
தார்மீக கணக்கீடுகள்
9/11 தாக்குதல்களுக்குப் பிறகு உடனடியாக, மீண்டும் ஒரு தாக்குதல் அலை வரப்போகிறது என்ற அச்சம் பரவலாக நிலவியது.
உண்மையில், மேலும் பல கட்டடங்களைத் தாக்குவதற்காக “விமானங்களின் பெரும் கூட்டம்” வரப்போகிறது என்று அல்கொய்தா அமைப்பே எச்சரித்திருந்தது.
அத்தகைய தாக்குதலை முன்கூட்டியே தடுத்து நிறுத்துவதற்கான அவசர முயற்சிகளில், அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் ஏராளமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன.
ஆப்கானிஸ்தானிலோ அல்லது பாகிஸ்தானிலோ மிகக் குறைந்த நம்பகத்தன்மை கொண்ட தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
நூற்றுக்கணக்கானோர் கைகளும் கால்களும் கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில், டயப்பர்கள் அணிவிக்கப்பட்டு, கியூபாவில், அமெரிக்க கடற்படைத் தளமான குவாண்டநாமோ பே -யில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மனித உரிமை அமைப்புகள், இதை அமெரிக்காவின் தார்மீக மனசாட்சியில் படிந்த கறை என்று விமர்சித்தன.
இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் காவலில் இருந்த கைதிகள் துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பான சர்ச்சைகள் பின்னர் வெளிச்சத்துக்கு வந்தன. இதில் தொடர்புடைய சிலர் பொறுப்புக்கூற வைக்கப்பட்டனர்.
ஆனால், உயர்மட்ட அதிகாரிகள் இதற்கான விளைவுகளை எதிர்கொள்ளாமல் தப்பிவிட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், குவாண்டநாமோ பே -யில் அமெரிக்கா இன்னும் விசாரணையின்றி தடுப்புக் காவலில் வைக்கும் நடைமுறையைப் பின்பற்றுகிறது. 2025ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து 200-க்கும் மேற்பட்ட ஆண்களை எல் சால்வடாரின் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்பு மையத்திற்கு நாடு கடத்தியபோதும் இது தொடர்ந்தது.
9/11க்குப் தாக்குதலுக்குப் பிந்தைய உடனடி காலகட்டம், பிரிட்டனுக்கும் மனித உரிமைகள் தொடர்பாக கறை படிந்ததாக இருந்தது.
2004ஆம் ஆண்டு, லிபிய இஸ்லாமியவாதியான அப்தெல்ஹகிம் பெல்ஹாஜ் மற்றும் அவரது மனைவியை தாய்லாந்திலிருந்து இருந்து லிபியாவிற்கு கடத்தி அனுப்பியதில் எம்ஐ6 உடந்தையாக இருந்தது.
அங்கு அவர் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டதுடன், கர்னல் முஅம்மர் கடாஃபியின் ஆட்சியால் சித்திரவதையும் செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் இறுதியில் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, 2018ஆம் ஆண்டு தலைமை வழக்கறிஞர் நாடாளுமன்றத்தில் முழுமையான பொது மன்னிப்பைக் கோரினார்.
இன்று, இந்த உளவுத்துறை அமைப்புகளுக்குள் உள்ள சட்டப் பிரிவுகள் தான் மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யாவும் சீனாவும் எழுச்சி
“இந்த நூற்றாண்டின் முதல் 20 ஆண்டுகளை கிட்டத்தட்ட முழுமையாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியே செலவிட்டோம்” என்று 2014 முதல் 2020 வரை ரகசிய உளவுத்துறையின் தலைவராக இருந்த சர் அலெக்ஸ் யங்கர் கூறினார்.
உயர்பதவியில் இருந்து விலகிய சிறிது காலத்துக்குப் பிறகு, ஒரு இலக்கிய விழாவில் என்னிடம் பேசிய அவர், “சீனா ஒரு ராணுவ சக்தியாகவும், ஒரு மூலோபாய சவாலாகவும் எழுந்ததை நாம் தவறவிட்டுவிட்டோம்” என்றும் கூறினார்.
இதேபோல், ஜெனரல் ஷிரெஃப் 2016ஆம் ஆண்டு “‘ரஷ்யாவுடனான போர்'” என்ற அரசியல் நாவலை எழுதினார். அதில் ரஷ்யா, யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பை நடத்தும் என்று அவர் முன்கூட்டியே கணித்திருந்தார்.
9/11க்குப் பிறகும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட”பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்” காலகட்டத்திலும், மேற்கத்திய நாடுகள் தாலிபன், ஐஎஸ்ஐஎஸ் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடுவதிலும், இராக்கின் குழப்பமான ஆக்கிரமிப்பைச் சமாளிக்க முயற்சிப்பதிலும் ஈடுபட்டிருந்த போது, ரஷ்யா மற்றும் சீனா மிகப்பெரிய அளவில் தங்களது ராணுவத்தை மறுசீரமைக்கும் திட்டங்களைத் தொடங்கின.
உதாரணமாக, ஹைப்பர்சோனிக் ஏவுகணை போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட புதிய கண்டுபிடிப்புகள், ஒருகாலத்தில் நேட்டோ அனுபவித்த ராணுவ முன்னிலையைத் தீவிரமாகச் சீர்குலைத்துள்ளன.
“9/11க்குப் பிறகு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மேற்கத்திய நாடுகள் கவனம் சிதறியது என்பது மட்டுமே மேற்கத்திய நாடுகளின் தவறு அல்ல” என்று பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிறுவனமான சிபிலைனின் தலைமை ஆய்வாளர் சாம் ஓல்சன் கூறுகிறார்.
“சீனாவின் எழுச்சியின் தன்மையையும் அது தவறாகப் புரிந்துகொண்டது. பொருளாதார ஒருங்கிணைப்பு அரசியல் ரீதியான ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும் என்று அது கருதியது.”
சீனா, இரான், ரஷ்யா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளைப் போலவே, உளவுத் தகவல்களைச் சேகரிப்பதற்கு “கடினமான இலக்கு” என்று கருதப்படுகிறது.
2001ஆம் ஆண்டு உயிரியல் அளவீட்டுத் தரவுகள் அதுவரை ஆரம்ப நிலையில் தான் இருந்தன.
ஆனால், அதன் பின்னர் முகம், கருவிழி மற்றும் நடை ஆகியவற்றை அடையாளம் காணும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படத் தொடங்கியுள்ளன.
இவை அனைத்தும், முகவர்கள் மற்றும் அவர்களை வழிநடத்தும் அதிகாரிகள் கடந்து செல்வதை உறுதி செய்வதில் இன்றைய சவாலை மேலும் அதிகரித்துள்ளன.
பட மூலாதாரம், Host Photo Agency via Getty Images
படக்குறிப்பு, கடந்த இருபது ஆண்டுகளில் சீனாவும் ரஷ்யாவும் எழுச்சி பெற்றுள்ளன.
அப்படியானால், மேற்கத்திய உளவுத்துறைக்கு சீனா குறித்து எந்த அளவுக்கு நன்றாகத் தெரியும்?
ரஷ்யாவுடன் சேர்த்து, இன்று எம்ஐ6-ன் முக்கிய உளவு இலக்குகளில் சீனாவும் ஒன்றாக உள்ளது. “மேற்கத்திய உளவுத்துறைக்கு சீனாவைப் பற்றி நிறையத் தெரியும்,” என்கிறார் சிபிலைன் நிறுவனத்தைச் சேர்ந்த சாம் ஓல்சன்.
“மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், ஒவ்வொரு தகவலையும் தனித்தனியாகப் பார்க்கிறது. ஆனால், அவை அனைத்தும் ஒன்றிணைந்து எதை உருவாக்குகின்றன என்பதை எப்போதும் புரிந்துகொள்வதில்லை.
சீனாவின் சக்தி என்பது இனி கப்பல்கள், ஏவுகணைகள் மற்றும் துருப்புகள் மட்டுமல்ல. அது அதிகரித்து வரும் அளவில் செமிகண்டக்டர்கள், முக்கிய கனிமங்கள், மின்கலங்கள், துறைமுகங்கள், தொலைத்தொடர்பு மற்றும் தொழில்துறைத் திறன் ஆகியவற்றிலும் உள்ளது.
எனவே, பிரச்னை பெரும்பாலும் உளவுத் தகவல்களைச் சேகரிப்பதில் ஏற்படும் தோல்வி அல்ல; மாறாக, அந்தத் தகவல்களை மூலோபாய ரீதியாகப் புரிந்துகொள்வதில் ஏற்படும் தோல்வியாகும்.”
25 ஆண்டுகளுக்கு முன்பு, 9/11 தாக்குதல்கள் நடைபெற்ற நாளில், அமெரிக்க உளவுத்துறை முகவர்களிடம் அந்தப் புதிரின் பல துண்டுகள் இருந்தன. உளவாளிகள் அடிக்கடி பயன்படுத்த விரும்பும் ஓர் ஒப்புமை இது.
ஆனால், ஒட்டுமொத்தமாக அவர்கள் அந்தத் துண்டுகளை ஒன்றிணைக்கத் தவறிவிட்டனர். தங்களுக்கு எதிராக என்ன நடக்கப்போகிறது என்பதை அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.
சிறந்த உளவுத் தகவல் சேகரிப்பு இருந்தாலும், அதை மூலோபாய ரீதியான ஆதாயத்துக்காகப் பயன்படுத்த முடியாவிட்டால், அதனால் எந்தப் பயனும் இல்லை.
அடையாளம் காண முடியாத ஒரு உலகம்
அந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் மேகங்கள் இல்லாத அந்தக் காலைப் பொழுதுக்குப் பிறகு கடந்த கால் நூற்றாண்டில், உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் உலகம் கிட்டத்தட்ட அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறியுள்ளது என்பது தெளிவாகிறது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கணினிமயமாக்கல் ஆகியவற்றின் வருகையால், இந்த மாற்றம் தொடர்ந்து நிகழப்போகிறது. சில துறைகளில், இது அதிவேகமாகவும், அதிவேக வளர்ச்சி விகிதத்திலும் நடைபெற வாய்ப்புள்ளது.
எனினும், முரண்பட்ட கருத்துகளும் நலன்களும் நிறைந்த உலகில், உளவுத்துறைத் தோல்விகள், கவனிக்கத் தவறிய விஷயங்கள் அல்லது மூலோபாயத் தவறான கணிப்புகள் ஆகியவற்றில் மேற்கத்திய நாடுகளுக்கு மட்டும் ஏகபோகம் இல்லை.
இதற்கு குறிப்பிடத்தக்க மற்ற உதாரணங்களில், 2022ஆம் ஆண்டு ரஷ்யா, யுக்ரேன் மீது நடத்திய பேரழிவை ஏற்படுத்திய முழு அளவிலான படையெடுப்பும், சிலர் இஸ்ரேலின் “சொந்த 9/11” என்று வர்ணித்துள்ள 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தலைமையில் காஸாவில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலும் அடங்கும்.
இறுதியாக, பெரிய, மூலோபாய மற்றும் தேசிய அளவிலான முடிவுகள் தொடர்பாக கேள்விகள் இன்னும் எழுப்பப்பட்டு கொண்டிருக்கின்றன.
அமெரிக்க அதிபர் புஷ் தலைமையிலான இராக் மீதான படையெடுப்பில் பிரிட்டன் இணைந்தது சரியான முடிவா?
அமெரிக்கா தலைமையிலான ஆபரேஷன் எண்டியூரிங் ஃப்ரீடம்’ நடவடிக்கையில் ஆப்கானிஸ்தானில் இணைந்துவிட்டு, இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறுவதற்கான அவசரத்தில் அந்த நாட்டை தாலிபன் வசம் விட்டது சரியான முடிவா?
இவை மட்டுமின்றி, இதுபோன்ற இன்னும் பல கேள்விகள் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





