தர்மபுரியில் நடைபெற்ற கட்சிப் பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுகவின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அதே வேளையில், தற்போதைய முதல்வர் விஜய் குறித்தும் சில காட்டமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதனால் திருமாவளவனின் இந்தத் திடீர் ஆவேசத்திற்கும் கோபத்திற்கும் பின்னணியில் என்ன காரணம் இருக்கிறது, அவர் யாருக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
கூட்டணி முறிவும் திமுகவின் தவறுகளும்
விழாவில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய திருமாவளவன், “விசிகவின் கூடாரம் காலியாகிவிட்டதால் தான் விஜய் பின்னால் திருமாவளவன் சென்றுவிட்டார் எனச் சிலர் பொய் தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். உளுந்தூர்பேட்டை மாநாட்டிற்கு வந்திருந்த மக்களுக்கு இதற்கான உண்மை தெரியும். திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியதை மட்டும் விமர்சித்து கேள்வி எழுப்புபவர்கள், முதன்முதலாக அங்கிருந்து காங்கிரஸ் வெளியேறியதைப் பற்றி ஏன் கேட்கவில்லை? பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரி கட்சிகள் வெளியேறியது குறித்து ஏன் வாய் திறக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து பேசிய அவர் தேர்தல் காலத்தில் திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இடையே எப்படிப்பட்ட உறவு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். கூட்டணியில் இருந்து முன்னணி கட்சிகள் அனைத்தும் வெளியேறியதற்கு திமுகவின் தவறான அணுகுமுறையே முழு முதற் காரணம். அதேபோல, தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) சரியாகக் கணிக்கத் தவறியதும் திமுக செய்த மிகப்பெரிய தவறுதான். கரூர் சம்பவம் நடைபெற்ற போதே விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால், அப்போதே அதைச் செய்யாமல் விட்டது திமுகவின் பலவீனத்தைக் காட்டுகிறது” எனக் குறிப்பிட்டார்.
விஜய் குறித்து திருமாவளவன் வெளிப்படுத்திய கருத்துகள்
விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், “ஆரம்பத்தில் விஜய் மீது எனக்கும் பெரியளவில் நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால், அவர்களுக்குத் தேவை ஏற்பட்ட போது அவர்கள் அதிமுக, பாமக அல்லது பாஜகவிடம் போய் ஆதரவு கேட்கவில்லை. விசிக மற்றும் இடதுசாரிகளிடம் தான் ஆதரவைக் கோரினார்கள். நமக்கு அவர்கள் தேவையில்லை என்றாலும், அவர்களுக்கு நமது ஆதரவு தேவைப்பட்டது. எனக்குப் பெரிய அளவில் பதவி ஆசை கிடையாது. நான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகி இருந்தால் கூட அமைச்சர் பதவியை ஏற்க மறுத்திருப்பேன். ஆனால், வன்னி அரசு குறைந்தபட்சம் 10 நாட்களாவது அமைச்சராகப் பணியாற்றட்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே புதிய அமைச்சரவையில் இடம்பெறச் சம்மதித்தேன்” என்று விளக்கமளித்தார்.
கூட்டணிப் பெயரும் ஜனாதிபதி ஆட்சியும்
திமுக തங்களை நடுவழியில் கைவிட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டிய திருமாவளவன், “கூட்டணி கட்சிகளை திமுக கையாண்ட விதம் முற்றிலும் தவறானது; இதைப் பற்றி எந்தவொரு நியாயஸ்தனும் வெளியில் பேசவில்லை. புதிய கூட்டணிக்கு பெயர் வைக்க வேண்டும் என்று விஜய் கூறிய போது, அதில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தியவன் இந்தத் திருமாவளவன் தான்.
இன்று பாஜக கூட சமூக நீதி அரசியலைப் பற்றிப் பேசுகிறது. எனவே, வெறும் சமூக நீதி என்பதை விட ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தை இருந்தால் மட்டுமே அது பாஜக இல்லாத உண்மையான கூட்டணியாக இருக்க முடியும். தமிழகத்தில் எந்தச் சூழலிலும் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு நாங்கள் ஆதரவளித்தோம். விசிக என்பது எப்போதும் ‘ஜென்-சி’ தலைமுறைக்கான கட்சி” என்று அழுத்தமாகக் கூறினார்.
அரசியல் விமர்சனங்களின் பின்னணி
திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியது முதலே, திமுகவைச் சேர்ந்த பலர் விசிகவை நோக்கித் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். திருமாவளவன் இதற்குப் பலமுறை விளக்கம் அளித்த போதிலும், திமுக தரப்பிலிருந்து விமர்சனங்கள் குறைந்தபாடில்லை. இதன் காரணமாகவே அவர் தர்மபுரி மேடையில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது.
அதே நேரத்தில், முதல்வர் விஜய் மீதும் அவர் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளதன் பின்னணியில் வேறொரு காரணமும் பேசப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியானது முதல், அதிமுக – திமுக கூட்டணி அமைத்துத் திருமாவளவனை முதல்வராக்க முயற்சி நடைபெற்றதாக ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தில் உலா வந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் அந்த முயற்சி கைக்கூடாமல் போய், விஜய்யின் தலைமையில் புதிய அரசு அமைந்தது. “நான் அமர வேண்டிய முதலமைச்சர் நாற்காலியில் அரசியலுக்குப் புதியவரான விஜய் அமர்ந்துவிட்டாரே, அவருக்குக் கீழ் கூட்டணி கட்சித் தலைவராகச் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதே” என்ற ஆதங்கமும் திருமாவளவனின் இந்த ஆவேசப் பேச்சுக்குக் காரணமாக இருக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
