இரண்டாவது ரவுண்ட் வெற்றி பெற்றதா? – ‘கட்டா குஸ்தி 2’ விமர்சனம்!

தன் மனைவி ஒரு குஸ்தி வீரர் என தெரியாமல் திருமணம் செய்து கொள்ளும் விஷ்ணு விஷால் பின்னர் அந்த உண்மை தெரிய வர அதன் பின் கணவன் மனைவிக்குள் வந்த சண்டையை வைத்து அதன் பின் பிரிவு, பாசம், ஒன்று சேர்வது என கட்டா குஸ்தி முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்தில் பெற்ற வெற்றியினால் இரண்டாம் பாகத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை இந்த கட்டா குஸ்தி 2 பூர்த்தி செய்ததா?

முதல் பாகத்தில் வெறும் கணவன் மனைவியாக இருந்த விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி தம்பதியினர் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து அக்குழந்தையை பள்ளியில் படிக்க வைக்கின்றனர். இப்பொழுது தாய் தந்தையாக இருவரும் இருப்பது போல் கதை ஆரம்பிக்கிறது. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் மனைவி ஐஸ்வர்யா லட்சுமி ரயில்வேஸில் வேலை செய்கிறார். விஷ்ணு விஷால், குடும்பத்தை கவனித்துக் கொண்டு ஹவுஸ் ஹஸ்பண்டாக தன் கடமையை செய்து வருகிறார். ஐஸ்வர்யா லட்சுமி வேலைக்கு போக மிச்சம் இருக்கும் நேரத்தில் குஸ்தி பழகி விளையாடுகிறார். நேஷனல் சாம்பியன் ஆக மாற அவர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். 

இவரின் இந்த அதீத முயற்சியை கவனித்த அவரின் கோச் ஈகோவால் எப்படியாவது ஐஸ்வர்யா லட்சுமியை விழ்த்திட வேண்டும் என எண்ணுகிறார். அதற்கு மறைமுகமாக விஷ்ணு விஷாலையே துணை போக வைக்கிறார். இதனால் ஐஸ்வர்யா லட்சுமி போட்டியில் தோற்கிறார். தன் தோல்விக்கு விஷ்ணு விஷால் காரணம் என நினைக்கும் ஐஸ்வர்யா லட்சுமி டைவர்ஸ் கேட்டு கோர்ட் வரை செல்கிறார். இதன்பிறகு உண்மையில் தவறு செய்தது யார்? விஷ்ணு விஷாலுக்கு எதிராக கோர்ட் வரை சென்ற ஐஸ்வர்யா லட்சுமிக்கு விவாகரத்து கிடைத்ததா, இல்லையா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை. 

இதுவரை நாம் தமிழ் சினிமாவில் பார்த்து பழகிய பல்வேறு குடும்ப கதைகள் போலவே இந்த படமும் அதே போன்ற ஒரு கதை அமைப்பை தழுவி உருவாகி இருக்கிறது. அதேசமயம் திரைக்கதையும் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை கணிக்கும் படியும் அமைந்திருக்கிறது. இவையெல்லாம் இப்படி இருக்கும் பட்சத்தில் அவை ரசிக்கும்படியான படமாக இருப்பது என்பது மிகவும் கடினம். ஆனால் இந்த படமும் அதை எல்லாம் உடைத்து விட்டு அனைத்து குடும்பங்களும் ரசிக்கும்படி மிகவும் கலகலப்பான ஒரு பாக்யராஜ், சுந்தர் சி வகையான குடும்ப படமாக அமைந்து பெரும் வெற்றி படமாக மாறி இருக்கிறது. 

142

முதல் பாதி முழுவதும் குடும்பம், குழந்தை பாசம், ஸ்போர்ட்ஸ் என நகரும் திரைப்படம் சில பல இடங்களில் மட்டும் மெதுவாக நகர்ந்து பின் இரண்டாம் பாதியில் இருந்து வேகம் எடுத்து அதன் பின் மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து இறுதி கட்டத்தில் குறிப்பாக கலகலப்பு நிறைந்த ஜனரஞ்சகமான காட்சி அமைப்புகள் மூலம் தியேட்டரில் கைத்தட்டல்களாலும் விசில் சத்தங்களாலும் அதிர செய்து ஒரு பீல் குட் குடும்பங்கள் கொண்டாடும் கலகலப்பான காமெடி படமாக அமைந்து இப்படம் கரை சேர்ந்திருக்கிறது.

முதல் பாகத்தில் இருந்த அதே கலகலப்பு விறுவிறுப்பு இந்த பாகத்திலும் இன்னும் சற்று தூக்கலாக இரண்டாம் பாகத்திற்கு ஏற்றார் போல் இரு மடங்காக அமைந்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். பல இடங்களில் லாஜிக் பார்க்காமல் வெறும் மேஜிக் மட்டும் பார்க்கும் பட்சத்தில் இந்த படம் சிறப்பான படமாக அமைந்திருக்கிறது. இந்தாண்டின் பெரிய வெற்றி படங்கள் வரிசையில் இந்த படம் இணைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இயக்குநர் செல்ல அய்யாவு தனக்கு கொடுத்த ஸ்பேஸ்களில் புகுந்து விளையாடி படத்தை வெற்றி பெற செய்து இருக்கிறார். 

இந்தப் படத்தின் நாயகன் என்று விஷ்ணு விஷாலை கூறுவதை விட ஐஸ்வர்யா லட்சுமி கூறலாம். அந்த அளவு பல பரிமாணங்களை தன் நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். மிக அழகாக இருக்கிறார். அதேபோல் குஸ்திக்காக தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் சரியான கலவையில் கொடுத்து சிறப்பான முறையில் ஒரு தாயாகவும் ஒரு மனைவியாகவும் அதேசமயம் ஒரு வீராங்கனையாகவும் ஒரு சேர தன் உடல் அமைப்பையும் நடிப்பையும் சிறப்பான முறையில் கொடுத்து கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்து கைதட்டல் பெற்று இருக்கிறார்.

141

நாயகன் விஷ்ணு விஷால் நாயகிக்கு ஏற்றார் போல் சற்றே அடக்கி வாசித்து இருக்கிறார். எந்தெந்த இடங்களில் எகிற வேண்டுமோ அங்கு மட்டும் எகிற மற்ற இடங்களில் சிறப்பான நடிப்பை மீண்டும் ஒருமுறை கொடுத்து படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கிறார். முதல் பாகத்தை போலவே இதிலும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கின்றனர். அவர்கள் அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்தை கரை சேர்க்க உதவி இருக்கின்றனர். குறிப்பாக கருணாஸ் ஆரம்பத்தில் மிரட்டி பின்பு பணிந்து காமெடி செய்து சிறப்பான முறையில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

காளி வெங்கட், கொடுத்த வேலையை சிறப்பாக செய்து கவர்ந்திருக்கிறார். முனீஸ்காந்த் தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். மிக மிக குறிப்பாக மகளாக நடித்திருக்கும் சாரா சிறுமி மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இப்படத்தின் பிரதான கதாபாத்திரமாகவே மாறி பார்ப்பவர்களிடம் கைத்தட்டல் பெற்று இருக்கிறார். அந்த குழந்தையின் மிக நேர்த்தியான எதார்த்தமான நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக மாறி படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கிறது. இவரே இந்த படத்தின் மிகப்பெரிய யூ எஸ் பி-யாக இருக்கிறார்.

டீச்சராக வரும் மோக் ஷா கிளாமரான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அழகாக இருக்கிறார், தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பின் உச்சம். சிறப்பு தோற்றத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன் சில நேரங்களில் வந்தாலும் கலகலப்பு ஊட்டுகிறார். சில காட்சிகளே வந்தாலும் கருணாகரன் கவனம் பெறுகிறார். கோச்சாக வரும் வில்லன் கதாபாத்திரம் வழக்கமான வில்லனாகவே தென்படுகிறார். மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றனர். 

144

ஷான் ரோல்டன் இசையில் சம்பவக்காரி பாடல் குத்தாட்டம் போட வைக்கிறது. மற்றபடி பின்னணி இசை படத்திற்கு ஏற்றார் போல் சிறப்பான முறையில் அமைந்து பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவில் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை விட குஸ்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவரின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. ஸ்டன்ட் காட்சிகளும் சிறப்பு. அதேபோல் குஸ்தி சம்பந்தப்பட்ட காட்சிகளும் மிக மிக சிறப்பு. 

கணவன் மனைவிக்குள்ளே நடக்கும் ஈகோ சண்டையை வைத்துக்கொண்டு அதன் மூலம் குடும்பங்கள் கொண்டாடும் நகைச்சுவை கலந்த ஜனரஞ்சகமான காமெடி படமாக இப்படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் அதை திறன் பட கையாண்டு சிறப்பான முறையில் கொடுத்து அனைவரும் ரசிக்கவைத்திருக்கிறார். காட்சிகளும் காட்சி அமைப்புகளும் என்ன தான் யூகிக்கும்படி இருந்தாலும் திரைக்கதை அதையெல்லாம் மறக்கடிக்க செய்து பார்ப்பவர்களை படத்துடன் இரண்டரை மணி நேரம் ஒன்ற வைத்திருப்பது இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். அதுவே இந்த படத்தை கரை சேர்க்க உதவி இருக்கிறது. 

கட்டா குஸ்தி 2 – கலகல குஸ்தி!

Source link