இரவும், பகலும் அயராது உழைத்த இந்திய விஞ்ஞானிகள்; பிரதமர் மோடி பாராட்டு

புதுடில்லி: இந்திய விஞ்ஞானிகள் இரவும் பகலும் அயராது உழைத்து அவர்கள் இஸ்ரோவின் நற்பெயரை உயர்த்தி உள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரான்சின் பாரிஸில் நடைபெற்று வரும் சர்வதேச விண்வெளி மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: முதல் சர்வதேச விண்வெளி உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

அன்புடன் அழைப்பு விடுத்த அதிபர் மேக்ரானுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல நூற்றாண்டுகளாக விண்வெளி நமது கற்பனைத் திறனுக்கு உத்வேகம் அளித்து வருகிறது. இன்று, அது பூமியில் உயிர்களைக் காக்கும் பணியைச் செய்கிறது.

சந்திரயான்-3 விண்கல திட்டத்தின் வெற்றி மூலம், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா திகழ்கிறது. ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியனின் ரகசியங்களை வெளிக்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றார்.

எதிர்காலத்தை நோக்கிய நமது இலக்குகளாக, 2035க்குள் இந்திய விண்வெளி நிலையத்தை அமைப்பதும், 2040க்குள் நிலவுக்கு ஒரு இந்தியரை அனுப்புவதும் உள்ளன. இஸ்ரோவின் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகிற்கும் பயன்படுகின்றன. இந்த உலகளாவிய நம்பிக்கைக்குப் பின்னால், பல தலைமுறை இந்திய விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் உள்ளன.

இரவும் பகலும் அயராது உழைத்து அவர்கள் இஸ்ரோவின் நற்பெயரை உயர்த்தியுள்ளனர். இந்தியாவின் அணுகுமுறை, ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்த உணர்வு அனைத்து இடங்களுக்கும் பரவ வேண்டும். சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட, பாதுகாப்பான விண்வெளி திட்டங்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.

அறிவியல் தரவுகள் வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையுடனும் பொதுவான நோக்கத்திற்குப் பயன்பட வேண்டும். இந்தியாவின் விண்வெளிப் பயணம் இந்தக் கோட்பாட்டையே பிரதிபலிக்கிறது. விண்வெளித்துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன; இதற்கான பொறுப்பு நம் அனைவருக்கும் பொதுவானது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Source link