இறுதிச்சடங்கு முடிந்து 15 நாட்களுக்கு பின் 'இறந்த' மகன் ஜெயிலில் இருப்பதாக வந்த போன் கால்.. ஆடிப்போன பெற்றோர்

Summary

இறந்ததாகக் கருதி இறுதிச் சடங்கு செய்த 15 நாட்களுக்குப் பின் இளைஞர் உயிருடன் வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் கபூர்தலா பகுதியை சேர்ந்த ரவி குமார் என்ற இளைஞன் ஆகஸ்ட் 5 அன்று வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் திரும்பவில்லை.

குடும்பத்தினர் அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ஆகஸ்ட் 11 அன்று கபூர்தலா நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகார் அளிக்கப்பட்ட சில நாட்களில், எரிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இறுதிச் சடங்கு

சடலத்தின் புகைப்படங்களை பார்த்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், இறந்தது ரவி குமார் தான் எனத் தவறாக அடையாளம் காட்டினர்.

தன் மகன் இறந்துவிட்டதாக நம்பிய குடும்பத்தினர், ஆகஸ்ட் 13 அன்று அந்த உடலுக்கு முறைப்படி தகனம் செய்து இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தனர்.

திருப்பம்

இறுதிச் சடங்குகள் முடிந்து குடும்பத்தினர் துக்கத்தில் இருந்த நிலையில், செப்டம்பர் 2 அன்று கபூர்தலா மத்திய சிறை ஊழியரிடமிருந்து குடும்பத்தினருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

ரவி குமார் என்ற நபர் தங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்த ஊழியர் தெரிவித்தார்.

பின்னணி

சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்ததால் ஜலந்தர் காவல்துறையினரால் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே ரவி குமார் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிக்கிறார்.

இந்தத் தகவலால் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்த குடும்பத்தினர், மறுநாள் சிறைக்கு சென்று ரவி குமார் அங்கிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

ரவி குமார் என நினைத்து குடும்பத்தினர் எப் பிணத்தைத் தகனம் செய்தனர் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளதால், அது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link