இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் அதிரடியாகக் கைது!

இலங்கை முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சேவின் ஆட்சியின் போது, தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர போரில் கொத்து கொத்தாய் தமிழ் இனம் பலியாகியது. அந்தக் கண்ணீரும் கதறலும் எப்போதும் அழியாத வடு. இவருக்கு நமல், ரோஹித, யோஷித ராஜபக்ச ஆகிய மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், மகிந்த ராஜபக்சேவின் முதல் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்ச ஏர்பஸ் விமான கொள்முதல் ஊழல் வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஐரோப்பிய ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 10 அதிநவீன விமானங்களை வாங்குவதற்காக 2.3 பில்லியன் டாலச் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக ஏர்பஸ் நிறுவனம், இலங்கையின் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடம் பெரும் லஞ்சம் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில், அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் அமைப்புகள் கூட்டு விசாரணை நடத்தி வந்தது. இதனிடையே, நமல் ராஜபக்சவிடம் சுமார் 5 லட்சம் டாலர் மதிப்பிலான லஞ்சப் பணத்தை ஒப்படைத்ததாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன விசாரணை அதிகாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.  இதனையடுத்து அவர் கைது செய்யப்படவிருந்த நிலையில், உறவினர் ஒருவரின் வீட்டில் சந்திரசேன மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதற்கிடையில், தாங்கள் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ராஜபக்ச குடும்பத்தினர் மறுத்தனர். மேலும், தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அவர்கள் நிராகரித்தனர்.

இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள இரண்டு வங்கிக் கணக்குகள் வழியாக லஞ்சப் பணம் கைமாறியதாகவும், அதில், 8 லட்சம் அமெரிக்க டாலர் நமல் ராஜபக்சவுக்கு சென்றடைந்ததாகவும் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகள் நடத்திய கூட்டு விசாரணையில் தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த நிலையில், லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் அதிகாரிகள், நமல் ராஜபக்சவை அதிரடியாக கைது செய்து கொழும்பு நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவர் வரும் 18ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததன் அடிப்படையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

Source link