ராணிப்பேட்டை தவெக எம்.எல்.ஏ தாஹிரா சட்டப்பேரவையில் ஜே.கே டயர் தொழிற்சாலை பற்றி முன்வைத்த கோரிக்கைக்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதிலளித்திருந்தார். ஆனால் அப்படி ஒரு தொழிற்சாலையே இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதுபற்றி அமைச்சர் கீர்த்தனா தனது பதிவு மூலம் தெளிவுபடுத்திய சூழலில் தமிழக பாஜக விமர்சனம் செய்துள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஒருபுறம் பெருமிதம் கொள்ளும் விஷயமாக பார்த்தாலும், மறுபுறம் அவர்கள் செய்யும் தவறுகள் மாநில அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழில் சரிவர வாசிக்க முடியாதது தொடங்கி புள்ளிவிவரங்கள் மற்றும் ஆதாரங்களை தவறாக பதிவு செய்வது வரை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவை எதிர்க்கட்சிகள் கையில் கிடைத்த அஸ்திரமாக மாறி கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றன.
ராணிப்பேட்டை எம்.எல்.ஏ கேள்வியும், அமைச்சர் கீர்த்தனா பதிலும்
எம்.எல்.ஏ கோரிக்கை நேற்றைய தினம் கூட சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ராணிப்பேட்டை தவெக எம்.எல்.ஏ தாஹிரா, எனது தொகுதியில் ஜே.கே டயர் கம்பெனி இருக்கிறது. இந்த கம்பெனியால் மாசற்ற சுற்றுச்சூழல் ஏற்படுகிறது. அங்கிருக்கும் மக்களும் போராட்டம் நடத்தியுள்ளனர். நம்முடைய ஆட்சியில் அந்த கம்பெனியை இழுத்து மூட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அமைச்சர் ரியாக்ஷன் அதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அனைத்து கம்பெனிகளும் இங்கு இருக்க வேண்டும். அவர்களுக்கான சட்டத் திருத்தங்கள் கொடுத்து அந்த கம்பெனியும் இங்கு இருப்பார்கள் என்று இங்கு தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
அமைச்சர் கீர்த்தனா பேச பேச…கண் சிமிட்டாமல் பார்த்த சி.எம் விஜய்
ஜே.கே. டயர் கம்பெனி எங்கே?
ஆனால் ராணிப்பேட்டையில் அப்படி ஒரு நிறுவனமே இல்லை என்பது தான் உண்மை. இப்படி இல்லாத கம்பெனியை பற்றி மதிப்புமிக்க சட்டப்பேரவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் பேசுவது, அவருக்கு மட்டுமின்றி அவர் சார்ந்த கட்சிக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி அமைச்சர் கீர்த்தனா நேற்று இரவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுகையில், ராணிப்பேட்டை ஜே.கே டயர் கம்பெனி என்ற பெயரில் எதுவும் இல்லை. அதேசமயம் அவர் வேறொரு டயர் கம்பெனியை பற்றி சொல்லியிருக்கலாம். அதுபற்றி விரிவாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தவெக அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அமைச்சர் கீர்த்தனா
சட்டப்பேரவையில் நான் சொல்ல வந்த விஷயம் என்பது, தமிழகத்திற்கு தொழிற்சாலைகளும், அதன்மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பும் அவசியம். சுற்றுச்சூழல் காரணிகளால் நம்முடைய வளர்ச்சி தடைபடக் கூடாது. அதேசமயம் இரண்டும் நமக்கு முக்கியம். என்னுடைய கருத்தை தொலைநோக்கு அடிப்படையில் நமது மாநிலத்தின் கொள்கை சார்ந்த விஷயமாக புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஜே.கே டயர் நிறுவனமும் முக்கியமான ஓர் உறுதியை அளித்துள்ளது. மாநில அரசின் சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றுக்கு உட்பட்டு செயல்படும் எனக் குறிப்பிட்டிருக்கிறது.
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு
சமீபத்தில் கூட வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5,143 கோடி ரூபாய் மதிப்பில் 3,510 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஜே.கே டயர் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்று அமைச்சர் கீர்த்தனா பதிவிட்டுள்ளார். இந்த விளக்கம் நிச்சயம் ஏற்புடையது. எம்.எல்.ஏ ஒருவர் தவறுதலாக கம்பெனியின் பெயரை மாற்றி சொல்லியிருக்கக் கூடும்.
தமிழக பாஜக வெளியிட்ட ரீல்ஸ்
அதற்கு அரசின் கொள்கை குறித்து தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என்ற வகையில் உடனடியாக அமைச்சர் அளித்த விளக்கத்தை ஏற்க முடிகிறது. பின்னர் அதுபற்றிய உண்மை தெரிய வந்ததும் தவறை திருத்தி கொண்டு, அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும் எதிர்க்கட்சிகள் மத்தியில் மற்றொரு ரீல்ஸ் மெட்டீரியலாக மாறி விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. குறிப்பாக தமிழக பாஜக தனது சமூக வலைதளப் பக்கம் இதுதொடர்பான வீடியோவை ரீல்ஸாக மாற்றி பதிவிட்டிருக்கிறது.
Source link
