செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது புகைப்படங்கள் மற்றும் உருவத்தை அனுமதியின்றி பயன்படுத்தி, மாற்றியமைப்பதற்கு எதிராக நடிகை ஸ்ருதி ஹாசன் சட்டரீதியாக உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் தற்போது மும்பை உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளது.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறாா, அந்த வகையில் சமூகவலைதளங்களில் தனது முகத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள புகைப்படங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் அவர் சுட்டிக்காட்டிய பதிவுகளை இணையதளங்களில் இருந்து உடனடியாக நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஏ,ஐ மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் உள்ளடக்கங்கள் ஒருவரின் நற்பெயர் மற்றும் பொது அடையாளத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய தீவிரமான, சில நேரங்களில் மீட்டெடுக்க முடியாத பாதிப்பையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. தனது தனிநபர் அடையாள உரிமை (Personality Rights) மற்றும் விளம்பர உரிமைகளை (Publicity Rights) பாதுகாக்கக் கோரி ஸ்ருதி ஹாசன் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். தனது அனுமதியின்றி ஏ,ஐ மூலம் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோக்கள், மாற்றியமைக்கப்பட்ட காட்சிகள், அனுமதியற்ற விளம்பரங்கள் மற்றும் தனது புகைப்படம் மற்றும் தோற்றத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உரிமம் பெறாத பொருட்கள் மூலம் இந்த உரிமைகள் மீறப்படுவதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ் ஜாம்தார், ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோக்கள், மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்கள், சாட்பாட்கள் மற்றும் பிற உரிமை மீறல் உள்ளடக்கங்கள் தொடர்ந்து பரப்பப்படுவது ஸ்ருதி ஹாசனின் நற்பெயர், புகழ் மற்றும் வணிக நலன்களுக்கு “மீட்டெடுக்க முடியாத பாதிப்பை” ஏற்படுத்தியுள்ளதாகவும், தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். இதுபோன்ற பாதிப்புகளுக்கு பண இழப்பீடு மட்டுமே போதுமான தீர்வாக இருக்க முடியாது. ஏனெனில், டீப்ஃபேக் உள்ளடக்கம் ஒருமுறை இணையத்தில் பரவத் தொடங்கிவிட்டால், அது “எல்லையற்ற அளவில் நகலெடுக்கப்பட்டு பரப்பப்படும்” வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம் ஒருவரின் தனிநபர் அடையாள உரிமையும் பொது உருவமும் நிரந்தரமாக பாதிக்கப்படக்கூடும். தனிநபர் அடையாள உரிமை, விளம்பர உரிமை மற்றும் தனியுரிமை உரிமைகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் ஆதரவு இருக்கிறது. ஸ்ருதி ஹாசனின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மார்பிங் செய்து, டீப்ஃபேக் அல்லது சூப்பர் இம்போஸ் முறையில் மாற்றியமைத்து உருவாக்குவது அவரது தனிநபர் அடையாள உரிமை, விளம்பர உரிமை மற்றும் தார்மீக உரிமைகளை மீறுவதாகும்.
இந்த உரிமைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின் கீழ் பாதுகாக்கப்படுவதாகவும், தனியுரிமை மற்றும் கண்ணியத்துடன் வாழும் உரிமை உள்ளிட்ட வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவை அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் பாதுகாக்கப்படுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதன் அடிப்படையில், ஸ்ருதி ஹாசனுக்கு ஆதரவாக “மிகவும் வலுவான முதற்கட்ட வழக்கு” இருப்பதாக நீதிமன்றம் கருதியது.
தனது உருவம் மற்றும் அடையாளத்தைப் பயன்படுத்தி அனுமதியற்ற உள்ளடக்கங்களை உருவாக்கி, பதிவேற்றி, விநியோகித்த பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக ஸ்ருதி ஹாசன் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்திருந்தார். போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதிலும், வழக்கில் எதிர்மனுதாரர்களில் சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும், அவர்கள் தங்களது தரப்பு பதிலையும் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்தது.
இதற்கிடையில், சில எதிர்மனுதாரர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஸ்ருதி ஹாசனின் சட்டக் குழுவினர் தெளிவாகப் படிக்கக்கூடிய யு.ஆர்.எல். (URL)-களை வழங்கியவுடன், தங்களது தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள உரிமை மீறல் உள்ளடக்கங்கள் உடனடியாக நீக்கப்படும் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தனர். இந்த வழக்கில் ஸ்ருதி ஹாசன் சார்பில் ஆனந்த் & நாயக் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ரஷ்மின் கண்டேகர், அமீத் நாயக், மது கடோடியா, அமன் சரஃப், மாலபிகா மற்றும் உன்னதி கம்பானி ஆகியோர் ஆஜராகினர்.
