இளைஞர்களைக் குறிவைக்கும் போதைப்பொருட்கள்; திருச்சியில் புதிய கமிஷனர் எடுத்த முக்கிய முடிவு

திருச்சி மாநகரின் புதிய காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா ஐபிஎஸ் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகரில் சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்துவது, இணையவழிக் குற்றங்களைத் தடுப்பது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த காமினி ஐபிஎஸ், கடந்த வாரம் சென்னை டிஜிபி அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவு ஐஜியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்குப் பதிலாக ரூபேஷ் குமார் மீனா ஐபிஎஸ் திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, திருச்சி மாநகரின் 34-வது காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகர காவல் ஆணையரகத்திற்கு வந்த அவரைத் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, தமிழக முதல்வரின் உத்தரவின்படி மாநகரில் சட்டம் – ஒழுங்கைப் பராமரிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். போதைப்பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதுடன், அவற்றின் தீமைகள் குறித்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் முக்கியம் எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிகரித்து வரும் இணையவழி மோசடிகள் மற்றும் இணையக் குற்றங்களைத் தடுக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். பொதுமக்கள் இணையவழிப் பணப் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்கவும், மோசடிகளில் சிக்காமல் தவிர்க்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் ரவுடிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். ரவுடித்தனம், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய காவல் ஆணையரின் இந்த அறிவிப்புகள், திருச்சி மாநகரில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதை உணர்த்துகின்றன.

செய்தி: க.சண்முகவடிவேல்

Source link