இழிவான நோக்கம், அருவருப்பாக இருக்கு; ஏ.ஐ ஆபாச வீடியோவுக்கு எதிராக கண்டனத்துடன் எச்சரிக்கை விடுத்த நடிகை சுனைனா

ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட தனது ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை சுனைனா, இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதார்.  

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் டெக்னாலஜிகளை பயன்படுத்தி, ஆபாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை உருவாக்கி இணையத்தில் வெளியிடுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நடிகைகள் குறித்து இதுபோன்ற பதிவுகள் இணையத்தில் அதிகரித்து வரும் நிலையில், இந்திய நடிகைகள் பலரும் இந்த பதிவுகளுக்கு எதிராக தங்களது கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து வருகின்றனர். 

இதே சமயம், நடிகைகள் குறித்த இந்த ஆபாச பதிவுகள் இணையத்தில் அதிகரித்து வருவது தொடர்கிறது. அந்த வரிசையில் தற்போது நடிகை சுனைனாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 2008-ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சுனைனா, அடுத்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, தொண்டன், லத்தி, குபேரா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 

தற்போது தனது முகத்தை வைத்து பரவி வரும் பதிவுகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள சுனைனா, ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆபாசமான பதிவுகளில் எனது முகத்தைப் பொருத்தி உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்கள் மற்றும் பிற இணையத் தளங்களில் பரப்பப்பட்டு வருவது எனது கவனத்துக்கு வந்துள்ளது. டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட அந்த பதிவுகள், தோற்றம், முகச்சாயல் மற்றும் தனித்துவத்தின் அடிப்படையில் என்னைப் போன்ற ஒருவராகச் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

இந்த இழிவான, தீய நோக்கம் கொண்ட செயலால் நான் மிகுந்த அதிர்ச்சியும் அருவருப்பும் அடைந்துள்ளேன். இத்தகைய செயலுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பதிவு உருவாக்கவோ, வெளியிடவோ, பரப்பவோ எந்த வகையிலும் நான் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதையும், அதற்கு அனுமதி வழங்கவில்லை என்பதையும் தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறேன். இதனுடன் எனக்குத் தொடர்பு இருப்பதாக நேரடியாகவோ மறைமுகமாகவோ கூறப்படும் எந்தவொரு கருத்தும் முற்றிலும் பொய்யானது; தவறாக வழிநடத்தக்கூடியது; ஆதாரமற்றது.

இது எனது கண்ணியம், தனியுரிமை மற்றும் அடையாளத்தின் மீதான மிக மோசமான அத்துமீறலாகும். இது பாலியல் துன்புறுத்தலாகவும், அவதூறாகவும் அமைகிறது. மேலும், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா, 2023 உள்ளிட்ட இந்தியச் சட்டங்களின் கீழ் குற்றமாகும். இத்தகைய செயல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை; அவை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

எனவே, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் எச்சரிக்கை விடுக்கிறேன். உடனடியாக, இந்த உள்ளடக்கத்தை அல்லது அதன் எந்தவொரு பகுதியையும், மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தையும் உருவாக்குவது, பதிவேற்றுவது, பகிர்வது, மற்றவர்களுக்கு அனுப்புவது அல்லது மறுபதிவு செய்வதை நிறுத்த வேண்டும். தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தளங்கள், கணக்குகள், குழுக்கள் மற்றும் சாதனங்களில் இருந்தும் இந்த பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும்.

இந்த பதிவுகளை உருவாக்கியவர்கள், வெளியிட்டவர்கள் மற்றும் பரப்பியவர்கள் எனப் பொறுப்புடைய ஒவ்வொருவர் மீதும், இனி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குற்றவியல் மற்றும் சிவில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவேன். இந்த உள்ளடக்கத்தைத் தொடர்ந்து பகிர்பவர்களும் சட்டப்படி பொறுப்பேற்க வேண்டியிருக்கும். எனது நலம் விரும்பிகள், இந்த உள்ளடக்கத்தை யாரும் பகிர வேண்டாம். அது எங்கு காணப்பட்டாலும், சம்பந்தப்பட்ட தளங்களில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க உதவுங்கள்.

எனக்குச் சட்டப்படி உள்ள அனைத்து உரிமைகளும் நிவாரணங்களைப் பெறுவதற்கான வழிமுறைகளும் எவ்விதத்திலும் கைவிடப்படவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளனார். சுனைனாவின் இந்த பதிவு இணையத்திலி் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்கள் ஆதரவை அவருக்கு தெரிவித்து வருகின்றனர். 



Source link