தமிழகத்தில் அரசியல் களம் முற்றிலும் மாறியிருக்கிறது. தமிழ் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கக்கூடிய சூழலில், அவருக்கு அதிமுக தரப்பிலிருந்து தொடர்ந்து ஆதரவு அலைகள் எழுந்திருக்கின்றன.தற்போது தனுஷுக்கு ஆதரவாக பேசியிருக்கும் அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி, தவெக தனுஷை பார்த்து பயப்படுவதாக தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
தனுஷின் அரசியல் நகர்வுகள்
2021 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் விஜய் வெற்றி பெற்று கோட்டையைப் பிடித்த பிறகு, பல நடிகர்களும் தங்களது அரசியல் விருப்பத்தைப் பொதுவெளியில் தெரிவித்து இருக்கின்றனர். அதில் முக்கியமாக, தனுஷ் தீவிரமான அரசியல் வேலைகளை முன்னெடுத்து வருகிறார்.
ஏற்கெனவே முதற்கட்டமாகக் கோவை ரசிகர் மன்றத்தைத் தொகுதி வாரியாகப் பிரித்ததனுஷ், தனது ரசிகர் நற்பணி மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கிறார்.
3,000 முதல் 5,000 பெண் நிர்வாகிகள் பங்கேற்பு
அதோடு மட்டுமல்லாமல், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் தனுஷ் நற்பணி மன்றத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 3,000 முதல் 5,000 வரையிலான பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அந்தக் கூட்டத்தில், “அன்புத் தலைவரே, தமிழகத்தின் எதிர்காலமே, தமிழகத்தின் செல்ல மகனே,எங்கள் அன்பின் அண்ணன் தனுஷ், எங்கள் தலைவரே” என்று பொறிக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய பேனர்கள் கல்லூரியைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்தன. மேலும், மகளிருக்குக் காமாட்சி விளக்கும் பரிசாக அளிக்கப்பட்டது.
தனுஷுக்கு அதிமுக தரப்பில் கிரீன் சிக்னல்?
இந்தச் சூழலில்தான் தனுஷ் தனது அரசியல் பிரவேசத்தை வெளிப்படையாகத் தெரிவிக்காவிட்டாலும், அவருக்கு அதிமுக தரப்பிலிருந்து கிரீன் சிக்னல் கிடைத்திருக்கிறது. ஏற்கெனவே டிடிவி தினகரன் பேசும்போது, தனுஷ் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்றைய தினம் ராஜேந்திர பாலாஜி, தனுஷைப் பார்த்து தமிழக வெற்றிக் கழகம் பயப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார்.
“அப்படியென்றால் முதல் டீம் தவெக” – ராஜேந்திர பாலாஜி
மேலும், செய்தியாளர்கள் அவரிடம், “தனுஷ் பாஜகவின் நான்காவது டீம் என்கிறார்களே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, “அப்படியென்றால் முதல் டீம் தமிழக வெற்றிக் கழகமா?” என்று எதிர்க் கேள்வி எழுப்பினார்.
தனுஷால் 35 வயதுக்குக் கீழ் உள்ள வாக்குகள் பிரியுமா?
தனுஷுக்கும் விஜய்க்கும் போட்டி இருக்கிறதோ இல்லையோ, அவர்களுக்கு இடையே போட்டி இருப்பதாகப் பேசப்படுகிறது. இப்போதுதான் விஜய்யும் இதேபோல அரசியலுக்கு வந்தார். விஜய்யைப் போலவே தனுஷுக்கும் தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவராலும் 35 வயதுக்குக் கீழ் உள்ள வாக்குகளைப் பிரிக்க முடியும்.
மேலும், தனுஷின் வருகையால் மனதளவில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்களும் நிர்வாகிகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதன் வெளிப்பாடுதான் அவர்களின் பேச்சுகள்.
“இந்த ஆட்சிக்கு ஏமாற்றம் காத்திருக்கிறது”
தமிழக வெற்றிக் கழகத்தினர் விபத்தில் ஆட்சியைப் பிடித்தவர்கள். அதேபோல வேறு யாரும் வந்துவிடுவார்கள் என்ற பயம் இருக்கத்தானே செய்யும்? நிச்சயம் இந்த ஆட்சிக்கு ஓர் ஏமாற்றம் காத்திருக்கிறது. தனுஷ் வரட்டும், பார்க்கலாம்.
அரசியல் களத்தில் திமுகவும் அதிமுகவும்தான் கொள்கை ரீதியான கட்சிகள். மற்றவர்கள் எல்லாம் விருப்பத்தின் பேரில் வரக்கூடியவர்கள் என்று ராஜேந்திர பாலாஜி பேசியிருக்கிறார்.
