டெல்லி குருகிராமை சேர்ந்தவர் ரிஷப் கௌஷிக். இவர் சம்பவத்தன்று இரவு சுமார் 10:58 மணியளவில் ‘கடக் சிங் டா தாபா’ என்ற உணவகத்தில் இருந்து உணவை ஆர்டர் செய்திருந்தார். இதையடுத்து அவர் உணவிற்காகக் காத்துக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் காத்திருந்த அவர், வெகுநேரமாகியும் உணவு வராததால் விரக்தியடைந்தார். இதனால், டெலிவரி ஊழியர் எங்கு இருக்கிறார்? என அந்த செயலியின் மூலம் கண்காணித்தார். அதில், டெலிவரி ஊழியர் கிட்டத்தட்ட 40 நிமிடங்களாக ஒரே இடத்தில் நகராமல் இருப்பதை, அவர் செயலியின் நேரலைக் கண்காணிப்பில் கவனித்தார்.
இதனால், சந்தேகமடைந்த ரிஷப் டிராக்கரில் காட்டப்பட்ட, ஜிபிஎஸ் இருப்பிடத்திற்குத் தானே செல்ல முடிவு செய்தார். அவர் அங்குச் சென்றடைந்தபோது, ​​தான் ஆர்டர் செய்திருந்த உணவை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதாவது, அந்த ஊழியர் டெலிவரியை முடிப்பதற்குப் பதிலாக, வாடிக்கையாளர் ஆர்டர் செய்த அந்த உணவு பார்சலை, அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர்களுக்கு ரூ.100 பணத்திற்காக விற்றது தெரியவந்தது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளர், டெலிவரி நிறுவனத்தின் மீது அதிருப்தி அடைந்தார்.
மேலும், இது சம்பந்தமான புகைப்படங்களை சமூக வலத்துப்பக்கத்தில் வெளியிட்டு தனது ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தார். இதற்கு இணயவாசிகள் பல்வேறு விதமான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில், சிலர் பசியில் இருக்கும் ஒருவர் உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்கும் போது, இப்படி செய்தால் இவர்களை எப்படி நம்புவது? என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறனர்.
