புதுடில்லி: இஸ்ரோவின் மற்றொரு சிறப்பான சாதனை, நம் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் தருணமாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புவி கண்காணிப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், இ.ஓ.எஸ்.-05 செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி., எப்-17 ராக்கெட் இன்று அதிகாலை 2:55 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இது இஸ்ரோவின் மற்றொரு சிறப்பான சாதனை மற்றும் நம் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் தருணமாகும்.
புவி-ஒத்திசைவு சுற்றுப்பாதையிலிருந்து இந்தியாவின் முதல் இமேஜிங் செயற்கைக்கோளான EOS-05-ஐ ஏந்திச் சென்ற GSLV-F17ன் வெற்றிகரமான ஏவுதல், இந்தியாவின் விண்வெளித் துறையின் வளர்ந்து வரும் திறன்களைப் பிரதிபலிக்கிறது.
இஸ்ரோவிற்கும், இந்தியத் தொழில்துறைக்கும் இடையே வளர்ந்து வரும் உறவானது, நமது விண்வெளித் திட்டத்திற்குப் புதிய வலிமையை அளிக்கிறது. விண்வெளி துறையில் இந்தியாவின் திறன்களை பலப்படுத்துகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
