உதவியாளர் வீட்டில் பணம், நகைகளை கைப்பற்றிய அமலாக்கத்துறை: கட்சி பதவியை ராஜினாமா செய்தார் காங்., தலைவர்!

-நமது நிருபர்-

உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் தனது கட்சிப் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவர் பதவியை ஹரிஷ் ராவத் வகித்து வந்தார். இவரின் 2014 முதல் 2017ம் ஆண்டு வரையிலான முதல்வர் பதவி காலத்தில், சிறப்புப்பணி அதிகாரியாக செயல்பட்டவர் சந்தன் சிங் ஜீனா. இவரது வீட்டில் கிராம பஞ்சாயத்து விகாஸ் அதிகாரி தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்து குற்றச்சாட்டு அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

இந்தச் சோதனையின்போது கணக்கில் வராத பணம், தங்கம் மற்றும் ஆடம்பர கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டது. தனது உதவியாளர் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, உத்தராகண்ட் காங்கிரஸ் தலைவர் ஹரிஷ் ராவத் தனது கட்சிப் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தன் மீதான அல்லது தனது உதவியாளர் மீதான இப்பிரச்னையால் காங்கிரஸ் கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படக் கூடாது; ராகுலின் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு எவ்விதத்திலும் பலவீனம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதி ராஜினாமா முடிவை எடுத்ததாக ஹரிஷ் ராவத் தெரிவித்தார்.

மேலும் அவர், ”தேர்தல் எப்போது நடைபெறும் என்று யாராவது என்னிடம் கேட்டால், சிபிஐ என் கதவைத் தட்டும் போதுதான் தேர்தல் நடைபெறும் என்று நான் வேடிக்கையாகச் சொல்வேன்.

அது இன்னும் நடக்கவில்லை என்றால், அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று அர்த்தம். இருப்பினும், இந்த முறை என் கதவைத் தட்டுவதற்குப் பதிலாக, எனது கூட்டாளிகளில் ஒருவரின் கதவைத் தட்டி ஒரு கதையை உருவாக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது,’ என்று குற்றம் சாட்டினார்.

Source link