உயிருக்கு உலை வைத்த இலவச வீடு விவகாரம்; திமுக பஞ்சாயத்து தலைவர் கல்லால் அடித்துக் கொ*லை!

நெல்லை மாவட்டத்தின் வள்ளியூர் பகுதியின் தி.மு.க.வைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் படு பயங்கரமாக கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டது நெல்லை ஏரியாவை பீதியில் தள்ளியிருக்கிறது.

நெல்லை மாவட்டத்தின் வள்ளியூர் அருகேயுள்ள கண்ணநல்லூரைச் சேர்ந்தவர் மகாராஜன். தி.மு.க.வைச் சேர்ந்த இவர், கண்ணநல்லூரின் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்துள்ளார். தன்னுடைய பதவி காலத்தில் பஞ்சாயத்து பகுதிகளுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாகச் செய்து வைத்திருக்கிறார். இந்தச் சூழலில் கண்ணநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தாமரை குளம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் சரியாக செய்யப்படவில்லை என்கிற பிரச்சினை மக்களிடையே விவகாரமாகியிருக்கிறது.

இதையடுத்து குடிநீர் விநியோகத்தை சீரமைப்பது தொடர்பாக பஞ்சாயத்து ஊழியர்களுடன் மகாராஜன் நேற்று சுமார் 8 மணியளவில் தாமரைகுளம் கிராமத்தில் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் அங்கிருந்த அப்பகுதியைச் சேர்ந்த இசக்கியப்பன் என்பவர் மகாராஜனிடம் வந்து குடிநீர் சப்ளை விவகாரம் தொடர்பாக பேசினார். இருவருக்கும் பேச்சுவார்த்தை முற்றி வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த இசக்கியப்பன், அந்தப் பகுதியில் வீடு கட்டுவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல் ஒன்றை எடுத்து மகாராஜனின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் கடுமையாக மண்டை உடைந்து படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டிய மகாராஜன் அங்கேயே மயங்கி சரிந்துள்ளார். இதையடுத்து தாக்கிய இசக்கியப்பன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனிடையே படுகாயம் அடைந்த மகாராஜனை மீட்ட அங்கிருந்தவர்கள் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் அங்கு சேர்த்த ஒரு சில நிமிடங்களிலேயே மகாராஜன் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

தகவலறிந்த வள்ளியூர் டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ். சுரேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு இதுகுறித்து விசாரணை நடத்தினர். சம்பவம் காரணமாக தப்பியோடிய இசக்கியப்பன் மற்றும் அவருடன் சேர்ந்து செயல்பட்ட 16 வயதான இளஞ்சிறார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பஞ்சாயத்து தலைவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பதட்டத்தைக் கிளப்ப, பாதுகாப்பின் பொருட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் வள்ளியூர் பகுதியிலோ பதற்றம் தணியாத சூழல். பஞ். தலைவர் கொலைக்கு காரணம் குடிநீர் விநியோகம் சீராக செய்யப்படவில்லை என்று சொல்லப்பட்டாலும் அந்தப் பகுதி மக்களிடம் நிகழ்வுகளை விசாரிக்கும்போதுதான் அந்த பயங்கரம் வெளிப்பட்டது.

பஞ்சாயத்து தலைவர் மகாராஜனும், கைதான இசக்கியப்பனும் ஒரே சமூகம் சார்ந்தவர்கள். இசக்கியப்பனுக்கு கிராமப் பகுதி. வீடு கட்டும் திட்டத்தில் இலவச வீடு ஒன்றிற்கு அரசு அனுமதி கிடைத்திருக்கிறது. வீடு கட்டுவதற்கு பஞ்சாயத்து தலைவர் மகாராஜனின் முறையான ஒப்புதல் அவசியம் என்பதால் ஒப்புதலுக்காக இசக்கியப்பன், மகாராஜனை அனுகியிருக்கிறார். ஆனால் இசக்கியப்பன் பலமுறை இது தொடர்பாக கேட்டும் மகாராஜன் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்த விவகாரம் இருவருக்கிடையே பகையாக உருவாகியிருக்கிறது. இதனால் இசக்கியப்பன் நீதிமன்றத்தில் இலவச வீடு தொடர்பான ஆவணங்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர் வீண் கால தாமதம் செய்தததையும் புகாராகத் தெரிவித்திருக்கிறார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு இலவச வீட்டிற்கான அனுமதியை உடனடியாக வழங்குமாறு மகாராஜனுக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஆனாலும் மகாராஜன் காலம் தாழ்த்தியிருக்கிறார்.

தன்னை மீறி இசக்கியப்பன் நீதிமன்றம் மூலம் உத்தரவு வாங்கியது மகாராஜனுக்கு கடுப்பை கிளப்பியுள்ளதாம். இதனால் ஆத்திரமான மகாராஜன், இசக்கியப்பனை பழிவாங்கும் பொருட்டு அவர் குடியிருக்கும் தாமரைக்குளம் பகுதிக்கு மட்டும் நான்கைந்து நாட்களாக குடிநீர் சப்ளை சரிவர செய்யாமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில் தான் ஏற்கனவே வீடு அனுமதி தராத ஆத்திரம், அதோடு தன்னை பழிவாங்கும் நோக்கில் தன்னுடைய பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யாதது உள்ளிட்டவைகளால் கடுப்பில் இருந்த இசக்கியப்பன், மகாராஜனிடம் இது பற்றி பேச இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி மோதலான சூழ்நிலையில் தான் இசக்கியப்பன் அருகில் கிடந்த செங்கலால் மகாராஜனின் தலையில் தாக்கியதில் படுகாயம் அடைந்து மரணமடைந்திருக்கிறார் என்கிறார்கள் அப்பகுதியினர். தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் ஒருவர் இலவச வீடு வழங்குவது தொடர்பாக கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் வள்ளியூர் பகுதியை பதற்றத்தில் தள்ளியுள்ளது.

Source link