கடந்த மாதம் தலை நகர் புவனேஸ்வரில் உள்ள ‘மதர்ஸ் பப்ளிக் பள்ளி’யில் நடைபெற்ற ‘ஒடிசா மாநில பிளிட்ஸ் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் ரேட்டிங் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் 2026’ போட்டியில் பங்கேற்றதன் மூலம் எலினா இந்த தரவரிசையை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 4 ஆண்டுகள் மற்றும் மற்றும் 6 மாத கால வயதுடைய எலினா 1432 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
எலினா மிஸ்ரா சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் உலக அளவில் இடம் பிடித்த மிக இளைய பெண் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஆனால், அதே வேளையில் ஒட்டுமொத்தப் பிரிவில் (ஆண்/பெண்) மிக இளைய வயதில் தரவரிசையில் இடம் பெற்ற வீரர் என்ற உலகச் சாதனை, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சர்வாக்யா சிங் குஷ்வாஹா என்பவர் வசமே உள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில், இவர் தனது 3 ஆண்டுகள், 7 மாதங்கள் மற்றும் 20 நாட்களில் ரேபிட் பிரிவில் தரவரிசையில் இடம் பெற்று இச்சாதனையைப் படைத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் இந்திய வீரர்கள் செஸ் விளையாட்டில் கோலோச்சி வருகின்றனர். இந்நிலையில், மிக இளம் வயது சிறுவர், சிறுமிகள் இது போன்ற மகத்தான சாதனைகளைப் படைத்து வருவது அனைத்து குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் இருப்பதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
