புதுடில்லி: உலக சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் போட்டியிட அனுமதி கோரி, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தாக்கல் செய்த மனுவை டில்லி ஐகோர்ட் நிராகரித்தது.
கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் வரும் அக்டோபர் 24 முதல் நவம்பர் 1 வரை உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கான இந்திய வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் போட்டிகள் டில்லியில் வரும் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் நீதிமன்றத்தை நாடினார்.
கடந்த 2025 ஜூலை மாதம் தாயான வினேஷ் போகத், மகப்பேறு விடுப்பில் இருந்ததால் இந்திய மல்யுத்த சம்மேளனம் நிர்ணயித்த தகுதிப் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. இதனால் தேர்வுப் போட்டியில் பங்கேற்க சிறப்பு விலக்கு அளிக்க வேண்டும் கோரி வினேஷ் போகத் டில்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவர்ண காந்த சர்மா விசாரித்தார். வினேஷ் போகத் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜசேகர் ராவ், ”போட்டியில் பங்கேற்க தகுதிகள் குறித்து வினேஷ் போகத்துக்கு செப்டம்பர் 7ம் தேதி தான் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரசவத்துக்கு பிறகு மீண்டும் மல்யுத்த போட்டிக்கு வினேஷ் போகத் திரும்பி இருப்பதால் விதிகளில் சில தளர்வுகளை வழங்க வேண்டும்” என வாதிட்டார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். விதிகளை ஆய்வு செய்யாமல் அவசரத் தீர்வு வழங்கினால் மற்ற வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி நீதிமன்றம் மனுவை ஏற்க மறுத்துவிட்டது. ”விதிகள் அனைத்து வீரர்களுக்கும் பொதுவானது; ஒரு தனிநபருக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்க முடியாது” என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
