தமிழக முதலமைச்சர் விஜய், ‘ஊழல் செய்தால் பதவி பறிக்கப்படும்’ என்று கூறியதைப் போல, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் அதே உறுதியை அளிக்கத் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தமிழகத்தில் படிப்படியாக ஊழல் குறைக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் தனது பதவிக்காலத்தை முடித்த ஜான் குமார் போல, தற்போதைய அமைச்சர்களின் காலமும் முடிந்துவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. முதலமைச்சர் ரங்கசாமியின் செயல்பாடுகளைப் பார்த்தால், புதுச்சேரியில் அமைச்சரவை இருக்கிறதா என்ற கேள்வியே எழுகிறது.
என்.டி.ஏ. கூட்டணியும், முதலமைச்சரும் வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து வருகின்றனர். நிர்வாகம் முழுமையாக ஸ்தம்பித்துள்ளது. அதிகாரிகள் தூங்குகிறார்கள். முதலமைச்சரைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. ஏன் இவ்வாறு நிர்வாகம் செயல்படுகிறது என்பது தெரியவில்லை? புதுச்சேரியில் அனைவரும் வாய்மூடி மௌனமாக இருப்பதற்கான காரணத்தை பா.ஜ.க. தலைவர்களும், அதன் பொறுப்பாளர்களும் விளக்க வேண்டும்.
என்.ஆர். காங்கிரஸ் அடிமைகளின் கட்சியாக மாறிவிட்டது. முதலமைச்சரைத் தவிர வேறு யாரும் பேசுவதில்லை. பா.ஜ.க. இதுவரை தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. புதுச்சேரி பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, இலாகா ஒதுக்கீடு குறித்து முதலமைச்சரே முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால், முதலமைச்சர் அதைத் தொடர்ந்து தட்டிக்கழித்து வருகிறார். கூட்டணி ஆட்சியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் கூட்டுப் பொறுப்பு உள்ளது.
மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் அரிசி வழங்கப்படவில்லை. எப்போது அரிசி வழங்கப்படும் என்பதை முதலமைச்சர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். போலி மருந்து விவகாரத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு சி.பி.ஐ-யில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு போலி மருந்துகள் கடத்தப்பட்ட விவகாரத்தில், அதில் தொடர்புடையவர்கள் பா.ஜ.க. மற்றும் என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மீண்டும் போலி மாத்திரை தயாரிக்கும் நிறுவனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் தொழிற்சாலைகளில் நேரில் ஆய்வு மேற்கொள்ளவில்லையா என்ற கேள்வி எழுகிறது.
வெளிநாடுகளுக்கு போலி மருந்துகள் கடத்தப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை அவசியம். ஆனால், சி.பி.ஐ. பாரபட்சமாக செயல்படுவது தெளிவாகத் தெரிகிறது. மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் புதுச்சேரி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உண்மை நிலையை மக்களுக்கு விளக்க வேண்டும்.
காமராஜர் பிறந்தநாள் விழாவில் ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமியை காமராஜருடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். காமராஜர் ரெஸ்டோ பார்களுக்கு ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கினாரா? பள்ளி, கோவில், குடியிருப்பு பகுதிகளில் ரெஸ்டோ பார்களை அனுமதித்தாரா? ஆளுநர் தனது கண்ணாடியைச் சுத்தம் செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரரான காமராஜரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடாது. மக்களிடம் பொய்யான தகவல்களை பரப்பக் கூடாது.
தமிழக முதலமைச்சர் விஜய், ‘ஊழல் செய்தால் பதவி பறிக்கப்படும்’ என்று கூறியதைப் போல, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் அதே உறுதியை அளிக்கத் தயாரா? தமிழகத்தில் படிப்படியாக ஊழல் குறைக்கப்பட்டு வருகிறது.”
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
