ஊழல் வழக்கில் பினராயி விஜயனுக்கு இடைக்கால நிம்மதி; லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு 7 நாள் சுப்ரீம்கோர்ட் தடை

புதுடில்லி: கேரள மாஜி முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான ஊழல் வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

விடுமுறைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. கேரளா ஐகோர்ட் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் டிவிஷன் பெஞ்ச்சை மனுதாரர்கள் அணுகலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

அமலாக்கத்துறை அறிக்கையை அடிப்படையாக கொண்டு, கேரள ஐகோர்ட், பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டு இருந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை 2 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வந்தது. இதை எதிர்த்து, பினராயி விஜயன் தரப்பின் மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, பினராயி விஜயன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஒரு வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால் லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. எப்ஐஆர் ரத்து செய்யப்படவில்லை. கேரளா ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் பினராயி விஜயன் தரப்பு மேல்முறையீடு செய்யவே இந்த ஒருவார அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக, கொச்சியை சேர்ந்த கனிம நிறுவனம் சிஎம்ஆர்எல் என்ற நிறுவனத்திற்கும், பினராயி விஜயன் மகள் வீணாவுக்கு சொந்தமான எக்சாலாஜிக் சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே முறைகேடாக பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது.

இதில், வீணாவின் மூலமாக பினராயி விஜயன் ரூ. 2.78 கோடி லஞ்சம் பெற்று, அந்த பணத்தை மருமகனும், முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் வழியாக துபாய்க்கு சட்டவிரோதமாக கடத்தியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருக்கிறது. பினராயி விஜயன், வீணா, மருமகன் முகமது ரியாஸ் ஆகியோர் மீது விஜிலென்ஸ் வழக்கு பதிந்தது.

Source link