கோவை | ஜூலை 25, 2026:
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு புதிய திட்டப் பணிகளின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக கோவை மாநகராட்சி 83-வது வார்டுக்கு உட்பட்ட வ.உ.சி. மைதானம் அருகே (நேரு ஸ்டேடியம் அருகில்) வாலிபால், கபடி, இறகுப்பந்து மற்றும் வுஷூ போட்டிகளுக்கான புதிய உள்ளரங்கு விளையாட்டு மைதானத்தை அமைச்சர் சம்பத்குமார் இன்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து அவரே இறங்கி வீரர்களுடன் உற்சாகமாக வாலிபால் விளையாடி மகிழ்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்ததாவது:
“கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அங்கன்வாடி மையங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், ஏ.ஆர் (AR) மற்றும் ஜி.ஆர் (GR) மையங்கள் என ரூ. 10 கோடியே 69 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகள் நிறைவுற்றுத் திறக்கப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் மட்டும் 14 இடங்களில் புதிய மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.”
தொடர்ந்து, சின்னவேடம்பட்டி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு மக்கள் தெரிவித்து வரும் எதிர்ப்பு குறித்துக் கேட்கப்பட்டபோது, மக்களுக்குப் புரியும் வகையில் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
‘ஜனநாயகன்’ படம் பார்த்து அழுதது குறித்து விளக்கம்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்து திரையரங்கில் கண் கலங்கியது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர்:
“நாங்கள் அமைச்சராக இருந்தாலும் மனிதர்கள் தான். கடந்த 30 ஆண்டுகளாக ரசிகனாக அவரைப் பெரிய திரையில் பார்த்து ரசித்து வந்தோம். இனி அவரைத் திரையில் பார்க்க முடியாது என்ற ஆதங்கத்தில் கட்டுப்பாட்டை மீறி எமோஷன் வெளிப்பட்டுவிட்டது.
இதை வைத்து தவெக அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் பணி செய்து எங்கள் இருப்பைக் காட்டினாலே போதும். திரையரங்கில் கண்ணீர் சிந்தியது எங்களது தனிப்பட்ட விஷயம் ” எனத் தெரிவித்தார்.
செய்தி: பி. ரஹ்மான், கோவை.
