“டெல்லியை தலை சாய்க்க வைத்துவிட்டீர்கள்” – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த 1 மாதமாக போராட்டம் நடத்தினர். கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி போராட்டம் நடத்த முயன்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் இளைஞர்களை காவல்துறையினரும் துணை ராணுவப் படையும் தடியடி, புகை குண்டு ஆகியவை மூலம் கடும் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து இந்த தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகமான பாலன் இல்லத்தில் நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (25-07-26) கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு வருகை தந்து இளைஞர்களின் போராட்டத்தில் பங்கேற்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அங்கு பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “அமைச்சர், அரசியல் கட்சி இதையெல்லாம் வெளியே வைத்துவிட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஒரு சாதாரண மனிதனாக இங்கே வந்திருக்கிறேன். சொத்துரிமை, வாக்குரிமை அனைத்து உரிமையுமே போராடி தான் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. நீட் ஒழிப்பை சட்டப்பூர்வமாக மாற்றி கல்வியை மாநில பட்டியலுக்காக போராடுகிற அனிதாவின் அண்ணன்கள் அத்தனை பேருக்கும் ஆதரவாக கட்சி வேறுபாடின்றி நாங்கள் நிற்கிறோம்.

தமிழ்நாடு முழுக்க ஜனநாயகபூர்வமாக அமைதியான முறையில் போராடக்கூடிய மாணவர்களுக்கு காவல்துறை எந்த அச்சுறுத்தலும் தரக்கூடாது என்பதை உங்கள் சார்பாக நான் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் ஒற்றுமை வளரட்டும், உங்கள் போராட்டம் தொடரட்டும். யாருக்குமே செவி சாய்க்காத டெல்லியை நீங்கள் செவி சாய்க்க வைத்திருக்கிறீர்கள். உங்களை தலை வணங்குகிறேன். இது யாருடைய போராட்டமும் கிடையாது. இது உங்களின் போராட்டம். எந்த திசை திருப்பலுக்கும் இடம் கொடுக்காமல் போராட்டம் நடத்துகிறீர்கள். உங்கள் போராட்டம் ஓங்கட்டும், உங்கள் அத்தனை பேருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்” என்று கூறினார். 

Source link