சென்னை: எதிர்காலத்தில் ஏஐ மனித குலத்தையே காலி செய்யும் என்றும், 10 சதவீதத்திற்கும் மேல் இதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் கூறியிருந்த நிலையில் அந்நிறுவனத்தின் சி.இ.ஓ இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். ஏஐயால் உண்மையில் ஆபத்து இருக்கிறதா இல்லையா என்பது குறித்து அவர் கூறியுள்ளார்.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பத் துறையையே புரட்டி போட்டுவிட்டது. செயற்கை நுண்ணறிவு கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. பல மணி நேரம் மனிதர்கள் செய்த வேலைகளை சில வினாடிகளில் முடித்துவிடுகின்றன.
ஏஐ தொழில் நுட்பம் தொடர்ந்து மேம்பட்டு வரும் நிலையில், அடுத்த பத்தாண்டுகளுக்குள் மனித குலத்தை அழித்துவிடும் ஆபத்து அதிகமாக இருப்பதாகவும் 10 சதவீதத்திற்கும் மேல் இதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்தில் முன்னாள் ஊழியர் வெளியிட்ட பதிவு பெரும் அதிர்வலைகளையும் ஏஐ குறித்த எதிர்கால அச்சத்தையும் கிளப்பியது.
தற்போதுள்ள ஏஐ மாடல்களால் மனித குலத்திற்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றாலும் வரும் காலத்தில், இந்த தொழில் நுட்பம் தானாகவே மேம்பட்டு, மனித குலத்திற்கு பேராபத்து ஏற்படுத்தும் அளவுக்கு மாறிவிடக்கூடுமோ என்று அச்சம் இருப்பதாக ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் இருந்து விலகிய ஜாகப் கூறியிருந்தார். ஏஐ நிறுவனங்கள் இந்த விஷயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு ரிஸ்க் எடுப்பதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து ஏஐ யின் எதிர்கால ஆபத்து குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாரியோ அமோடே கூறியிருப்பதாவது:- நாம் சரியான பாதையை தேர்வு செய்தால், தவறான நிலைக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு. நாம் தவறான பாதையை தேர்வு செய்தால், தவறுகள் நடப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கலாம்.
ஏஐ- வளர்ச்சியின் வேகத்தை குறைக்க வேண்டும். ஜாகப் கூறிய கருத்துகளில் நான் உடன்படுகிறேன். பொறுப்புடன் செயல்படும் நிறுவனமாக ஆந்த்ரோபிக் உள்ளது. இந்த விவகாரங்கள் குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் செயல்படும் நிறுவனமாகவும் ஆந்த்ரோபிக் உள்ளது என்று எங்கள் நிறுவனத்தில் வெளியேறும் போது ஜாகப் கூறினார். எங்கள் நிறுவனத்தை மட்டும் விமர்சிக்கவில்லை. ஒட்டுமொத்த தொழில்துறையும் மிக வேகமாக முன்னேறி வருவது குறித்துதான் அவர் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.
செயற்கை நுண்ணறிவால் சில விஷயங்கள் தவறாக நடக்க வாய்ப்பு உள்ளது என்று நான் கருதுகிறேன். ஆனால் அந்த வாய்ப்பு அவ்வளவு அதிகம் இல்லை. தவறான பாதைக்கு செல்வதை விட சரியான பாதைக்கு செல்வதற்கு எங்கள் ஏஜென்சி கவனம் செலுத்தும். சரியான பாதையில் செல்வதற்கான வழி, செயற்கை நுண்ணறிவு துறையில் உள்ள நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதுதான். இது கொஞ்சம் கடினமானதாக இருக்கலாம்.
இருந்தாலும், ஓரளவுக்கு உலக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. நாம் மெதுவாக செயல்பட தொடங்கினால், தொழில் நுட்பத்தின் கட்டுப்பாட்டை தவறான நபர்கள் எடுத்துவிடுவார்கள் என்று நம்புகிறேன். இதுவும் விஷயங்கள் தவறாக நடைபெறுவதற்கான வாய்ப்பை மீண்டும் அதிக அளவில் அதிகரிக்கும்” என்று கூறினார்.
