சுப. உதயகுமாரன்
தலைவர், தலைமைத்துவம் போன்றவை நேர்மறைச் சொற்களாக, ஆக்கப்பூர்வக் கருத்துப்படிவங்களாகப் பார்க்கப்பட்டாலும், அவற்றிலும் எதிர்மறை வெளிப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. லட்சக்கணக்கான மனிதர்களைக் கொலைசெய்த கீழ்க்காணும் கொடூரர்களின் (பிறந்த ஆண்டு அடிப்படையிலான) பட்டியலைப் பாருங்கள்:
தரப்பட்டுள்ள பட்டியலை நேர்த்தியான அட்டவணை வடிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு காணலாம்:
இந்தப் பட்டியலில் இன்னும் பல “தலைவர்களை” சேர்க்கலாம். இவர்களும் மாற்றம் குறித்துக் கனவு காண்பது, ஆதரவாளர்களை இனம் காண்பது, ஒன்று திரட்டுவது, ஒருங்கிணைப்பது, இலக்கு நோக்கி வழிநடத்துவது என அனைத்து ஆளுமைப் பண்புகளையும், தலைமைப் பண்புகளையும் பெற்றிருக்கின்றனர். இவர்கள் தலைவருக்கான பண்புகள் பல வாய்க்கப் பெற்றிருந்தாலும், அவற்றின் “பயன்கள்” முற்றிலும் வேறுபட்டிருப்பதால், இம்மாதிரி தலைவர் ஒருவரை எதிர்மறைத் தலைவர் என்றே கருத முடியும்.
ஓர் எதிர்மறைத் தலைவர் மிதமிஞ்சிய தற்பெருமையும், ஆணவமும், அகம்பாவமும், இறுமாப்பும், மாக்கியவில்லி போதிக்கும் சூழ்ச்சித் திறனும் கொண்டிருப்பார். அவர் தன்னையும், தன்னைச் சார்ந்த சிலரையும் மட்டும் பாதுகாத்துக்கொண்டு, பிறரைப் பற்றி மனங்கொள்ளாதிருப்பவர். மற்றவர்களின் தேவைகள், உணர்வுகள் பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் சிந்திக்காத கல்மனம் கொண்டவராகவே இருப்பார். பொதுப் பணத்தைத் திருடும், மக்களை எமாற்றும், முறையற்ற அனுகூலங்களை எடுத்துக்கொள்ளும் நேர்மையற்றவராகவும் இருப்பார்.
ஓர் எதிர்மறைத் தலைவர் மற்றவர்கள் மீது உடல், உணர்வு, மன ரீதியான கொடூரங்களை அரங்கேற்றும் தன்மை கொண்டவர். அச்சத்தையும், அச்சுறுத்தலையும் ஆயுதங்களாகக் கொண்டு, தண்டனைகள், வலிகள், கொடுமைகள், கொடூரங்கள் புரிந்து பிறரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார். எந்தவிதமான தார்மீக வரம்புகளோ, பொறுப்புணர்வோ இல்லாமல், தான் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என்கிற எண்ணத்தோடு செயல்படுவார்.
சர்வாதிகார மனப்பான்மையுடன் ஒவ்வொரு சிறிய விடயத்தையும்கூட தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புவார். உடனிருப்போரை ஒருபோதும் நம்ப மாட்டார். விடயங்கள் தவறாகப் போகும்போது, அவற்றுக்குப் பொறுப்பேற்காமல் பிறரைக் குறை சொல்வார். சரியான அறிவுறுத்தல்கள் வழங்காது, எதையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்காது இயங்குவார். புரிந்துணர்வு ஏதுமின்றி, எளிதாகக் கோபப்பட்டு, தோழர்களின் மனநலத்தை முற்றிலும் புறந்தள்ளுவார்.
இப்படிப்பட்ட எதிர்மறைத் தலைவர்கள்தான் வலிமைமிக்க நாடுகளில் இப்போது கோலோச்சி கொண்டிருக்கிறார்கள். உலகின் 72 விழுக்காடு மக்கட்தொகையைக் கொண்டிருக்கும் சற்றொப்ப 91 நாடுகள் எதேச்சாதிகார ஆட்சியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன என்கிறது ஓர் ஐரோப்பிய ஆய்வு நிறுவனம். பாசிச விழுமியங்களுடனும், கடுத்த அணுகுமுறைகளுடனும், வலதுசாரித் தலைவர்கள் கொடும் தேசியவாதம், வெறுப்பு அரசியல், வன்மம், வன்முறை என்றே ஆட்சி நடத்துகின்றனர். சமூகத் தூய்மை என்கிற பெயரில் இனவெறியும், அன்னியர் வெறுப்பும் கட்டவிழ்த்துவிடப் படுகின்றன; குடியேற்றக் கொள்கை இறுக்கமாக்கப்பட்டு, “வந்தேறிகள்” வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள்.
இந்தியாவின் மேனாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உலகளாவிய வலதுசாரிகள் ஒரு பன்னாட்டுக் கொள்கை உறவை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதுகிறார். வலதுசாரித் தத்துவத்தோடு இயங்கும் பல பன்னாட்டு நிறுவனங்கள் பிற்போக்குத்தனமான தலைவர்கள் தங்களுக்குள் தொடர்பும், புரிதலும் ஏற்படுத்திக் கொள்ள உதவுகின்றன. அந்நிறுவனங்கள் வலதுசாரிக் கட்சிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கின்றன; பன்னாட்டுப் பிரச்சினைகளில் ஒருமித்த நிலைப்பாடு எடுக்க உதவுகின்றன. மேலும் பல்வேறு நாடுகளில் வாழும் புலம்பெயர் மக்களைத் தத்தம் நாட்டு எதேச்சாதிகாரிகளை ஆதரிக்கவும் இந்நிறுவனங்கள் ஊக்குவிக்கிறார்கள். இம்மாதிரியான நடவடிக்கைகளால் உலகளாவிய வலதுசாரி சக்திகள் முற்போக்குக் கட்சிகள் மற்றும் விழுமியங்கள் மீதும், சுதந்திரமான பன்னாட்டுக் கட்டமைப்பின் மீதும் ஒரு பெரும் தாக்குதலைத் தொடுக்கின்றன. இம்மாதிரியான வலதுசாரிக் குழுக்களின் கைகளில் ஏராளமான வெளிநாட்டுப் பணமும் புரள்கிறது.
உண்மையில், தாராளமயம், தனியார்மயம், உலகமயம் எனும் மும்மையும் வலதுசாரி அரசியலுக்கு ஆதரவாகவே அமைகிறது. உலகமயம் என்பது மேற்கத்தியமயம் என்பது அமெரிக்கமயம் என்பது பணமயம் என்றாகிவிட்டிருக்கும் இன்றைய உலகில் வடக்கு நாடுகள் பொருளாதார ரீதியாக தெற்கு நாடுகளைக் காலில் போட்டு மிதிக்கின்றன. கட்டமைப்புச் சீர்திருத்தம், அந்நிய நேரடி முதலீடுகள், தொழிலாளர் சுரண்டல், சுற்றுச்சூழல் அழிப்பு, காலநிலைத் தகர்ப்பு, பொருளாதாரத் தடைகள், கூடுதல் வரிவிதிப்பு என்றெல்லாம் வடக்கு நாடுகள் ஆடும் ஆட்டம் தாங்க முடியாததாகவே இருக்கிறது. பன்னாட்டுச் சமூகமும், பல்வேறு நாடுகளும் இப்படி தடம்புரண்டு போய்க்கொண்டிருப்பது உலகம் முழுவதும் பாரதூர விளைவுகளை ஏற்படுத்துகிறது.
உலக அளவிலும், நாடுகள் அளவிலும் எதிர்மறை அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், இனத் தலைவர்கள், சாதித் தலைவர்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், குற்றக் குழுக்களின் தலைவர்களும் (criminal gang leaders) ஏராளமாக உருவாகி, திறம்பட இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் போதைப்பொருள் கடத்தல், ஆயுதம் கடத்தல், ஆள் கடத்தல், பெண்கள் கடத்தல், பயங்கரவாதம் என பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். மெக்சிகோ, கொலம்பியா, நைஜீரியா, சோமாலியா உள்ளிட்ட பல நாடுகள் எடுத்துக்காட்டுகளாய்த் திகழ்கின்றன.
தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை, எதிர்மறைத் தலைவர்கள் போதைப்பொருட்கள் வியாபாரம், கனிமவளக் கொள்ளை, பலான தொழில் போன்ற குற்றச் செயல்களில் தீவிரமாய்ச் செயலாற்றுகின்றனர். இவர்களுக்குக் குறைந்த செலவில் நிறைந்த வருமானம் வருகிறது. அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமூகப் பிரமுகர்கள் என ஏராளமானவர்களுடன் இவர்கள் தொடர்பில் இருக்கின்றனர். ஆலோசிக்காமல் அள்ளி வழங்குவதால் இவர்களால் யாரையும் விலைக்கு வாங்கவும் இயலும், வேண்டியதைச் சாதிக்கவும் முடியும்.
வேண்டிய பணமும், போதிய செல்வாக்கும், இளம் அடியாட்கள் பலமும் இருப்பதால் இவர்கள் யாருக்கும், எதற்கும் அஞ்சுவதில்லை,. போதியப் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளும் இவர்கள், கமுக்கமாகவே வாழ்கிறார்கள். தங்கள் தேவைகளுக்கல்லாமல் இவர்கள் எதற்காகவும் எழுந்து நிற்பதில்லை, ஏன் என்று கேட்பதில்லை.
இவர்களின் வலைப்பின்னல் வெளியே தெரிவதே இல்லை. இவர்களை அறிந்திருக்க வேண்டிய அதிகார வர்க்கம் நன்கு அறிந்திருந்தாலும் பாராமுகமாகவே இருப்பார்கள். அல்லது இவர்கள் தங்களின் பணபலத்தால், குற்றப் பின்னணியால் அவர்களைப் பார்க்காமல் இருக்கச் செய்வார்கள். பொதுமக்களுக்கு மேற்படி எதிர்மறைத் தலைவர்கள், அவர்தம் தொண்டர்கள், வலைப்பின்னல் பற்றி எதுவும் தெளிவாகத் தெரிய வராது.
இன்றைய தமிழ்நாட்டில் போதை விநியோகஸ்தர்கள், வளக்கொள்ளைக்காரர்கள், நில மாஃபியாக்கள், பலான புரோக்கர்கள் போன்றோர் ஒரு பெரும் வன்முறை வலைப்பின்னலை வைத்திருக்கிறார்கள். இந்த வலைப்பின்னலில் பிணைந்திருக்கும் ஒருவருக்குப் பொதுவெளியில் ஒரு பிரச்சினை எழுகிறதென்றால், உடனே அவர் ஓரிரு சகாக்களுக்குத் தகவல் கொடுக்கிறார். நொடிப் பொழுதில் பிற அடியாட்களுக்கும் தகவல் பறக்க, அவர்கள் இருசக்கர வாகனங்களில் இருவர், மூவராகச் சம்பவ இடத்துக்கு விரைகிறார்கள். இளம் கன்று பயமறியாது! போதையில் இருக்கும் இளம் கன்று கொஞ்சமும் பயமறியாது. உறுதியான பின்துணை கொண்ட போதையில் இருக்கும் இளம் கன்று பயம் என்றால் என்னவென்றே அறியாது!
பெரும்பாலும் மது மற்றும் போதைப் பொருட்களின் பிடியில் சிக்கியிருக்கும் இந்த இளைஞர் படை வந்திறங்கினால் என்ன வேண்டுமானாலும் செய்யும். அவர்களுள் யார் என்ன செய்வார் என்று அவர்களுக்கே தெரியாது. எண்ணிப் பார்க்கும் நிலையிலேயே இல்லாதவர்களுக்கு “எண்ணித் துணிகக் கருமம்” என்பதெல்லாம் உரைக்காது. ஒதுக்குப்புறமான இடங்களில் ஒரு சம்பவம் நடந்தால், அது பெரும்பாலும் கொலையில்தான் முடிகிறது. அதன் பிறகென்ன? கம்பெனி வழக்கறிஞர்கள் வருவார்கள், விரைவில் பிணையில் எடுப்பார்கள், கூட்டத்தில் ஓர் அங்கீகாரம் கிடைக்கும், தலைவரின் கவனத்தைப் பெறலாம். மேற்படியார் கெத்தாக உணர்கிறார்; ஏன், இன்னொரு தலைவராகவே உயரும் வாய்ப்பும் உருவாகிறது.
பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் குறிப்பிட்ட சில துறைமுகங்கள் வழியாக வந்திறங்குவதாகச் செய்திகள் வருகின்றன. தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகளில், கல்லூரிகளில் போதைப்பொருட்கள் புழங்குவது அதிகார வர்க்கத்துக்குத் தெரியும், காவல்துறைக்குத் தெரியும், உளவுத்துறைகளுக்குத் தெரியும், பள்ளி/கல்லூரி நிர்வாகங்களுக்குத் தெரியும், ஏன் நம்மைப் போன்ற பெற்றோருக்கும், பொதுமக்களுக்கும்கூட நன்றாகவே தெரியும். மத ரீதியான கும்பல் கொலைகள் தமிழ்நாட்டில் பெரிதாக நடக்கவில்லை என்றாலும், போதைப்பொருட்கள், கனிமவளங்கள் தொடர்பான கும்பல் கொலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
குற்றக் குழுக்களை, எதிர்மறைத் தலைவர்களைப் பகைத்துக் கொண்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்கிற விடயம் எல்லோருக்கும் தெரிகிறது. போதைப்பொருள் வர்த்தகத்தில் தலையிட்டால், கல்-மணல் குவாரிகளை எதிர்த்தால், பலான தொழில் புரவலர்களை முறைத்தால், உயிரையே இழக்கும் நிலைகூட எழலாம். .
நேர்மறைத் தலைவர்கள் முறைதவறி எதிர்மறையாகிப் போவதும், எதிர்மறைத் தலைவர்கள் பல்கிப் பெருகுவதும் விரும்பத்தகாத தலைமைத்துவ விளைவுகள்.
(கட்டுரையாளர் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்; பச்சைத் தமிழகம் கட்சியின் தலைமைப் பணியாளர்.)
